சேலம்
சேலம் மாவட்டத்தில் விசாரணை கைதி இறந்த விவகாரத்தில் தமிழக காவல்துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், கருமலை கூடல் கிராமத்தில் நடந்த பழனிச்சாமி என்பவர் கொலை வழக்கில், அதேகிராமத்தைச் சேர்ந்த கோகுல கண்ணன் என்பவரை கருமலைக்கூடல் போலீசார் பிடித்து, உதவி ஆய்வாளர்கள் ஹரிஹரன், கீர்த்திவாசன், வேணுகோபால் மற்றும் 4 போலீசார் அவரை அடித்து விசாரித்துள்ளனர்.
இதனால் நெஞ்சுவலி ஏற்பட்டு கோகுல கண்ணன் மயங்கி விழுந்தார். கோகுல கண்ணனை மருத்துவமனக்கு கொண்டுச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில்,
”வழக்கு தொடர்பான ஆவணங்கள் அறிக்கைகளை பரிசீலித்ததில், போலீஸ் நிலையத்தில் தாக்கப்பட்டதால்தான் கோகுல கண்ணன் மரணம் அடைந்துள்ளார் என்பது தெளிவாகுகிறது. எனவே, கோகுல கண்ணன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் அரசு வழங்கவேண்டும்.
இந்த இழப்பீட்டு தொகையை, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிஹரன், கீர்த்திவாசன், வேணுகோபால் ஆகியோரிடம் இருந்து தலா ரூ.2 லட்சமும், தலா ரூ.1.50 லட்சத்தை 3 போலீஸ்காரர்களிடம் இருந்தும் வசூலிக்க வேண்டும். இந்த 7 பேர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தி, தகுந்த முடிவை 3 மாதங்களுக்குள் எடுக்கவேண்டும்”
என்று கூறியுள்ளார்.