புதுக்கோட்டை: வேங்கை வயல் குடிதண்ணீர் தொட்டியில் ‘மலம்’ கலந்தது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர் முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு புதுக்கோட்டை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உடனடி முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வந்தது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை முடித்த சிபிசிஐடி அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தொடர்ந்து வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்து கிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், இந்த வழக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த நீதிமன்றத்தில் நீதிபதி பதவி காலியாக இருப்பதால், வழக்கை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி விசாரிப்பார் என்று மாவட்ட முதன்மை நீதிபதி செரஸ்தார் அறிவித்தார்.
இந்த நிலையில் வேங்கைவயல் வழக்கி மார்ச் 11ந்தேதி அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் என கூறப்படும் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆயினர். இதனையடுத்து விசாரணையின்போது சிபிசிஐடி தரப்பில் வேங்கைவயல் வழக்கு தொடர்பாக ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிவியல் பூர்வமான தடயங்களின் ஆய்வு முடிவுகள், வீடியோ, ஆடியோ ஆதாரங்கள், செல்போன் பதிவு ஆதாரங்கள் உள்ளிட்டவைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர்கள் தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேருக்கும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உடனடி ஜாமீன் வழங்கியது.
சாதாரண அவதூறு வழக்குகளுக்கு ஜாமின் மறுக்கும் நீதிமன்றங்கள், மக்களின் உயிரோடு விளையாடிய குற்றவாளிகளுக்கு உடனடி ஜாமின் வழங்கி இருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி வருகிறது.
பொதுவாக இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த குற்றச்சாட்டுக்களில், குற்றவாளிகளுக்க முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுக்கும். அதுபோல விசாரணையின்போது காவல்துறையினரும் முன்ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். ஆனால், வேங்கை வயல் குடிதண்ணீர் தொட்டியில் ‘மலம்’ கலந்தது தொடர்பான குற்றவாளிகளுக்கு, அவர்கள் ஜாமின் மனு தாக்கல் செய்த உடனே அதை விசாரித்து நீதிபதி ஜாமின் வழங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவன், இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப்பதிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை, நீதிமன்றமும், தமிழக அரசும் ஏற்கக் கூடாது. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு துணையாக இருக்கும் என நம்புகிறோம் என கூறியதுடன் குற்றம் சாட்டப்பட்ட பட்டிலின மக்களை கைது செய்தால் பிரசசினைகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது குற்றவாளிகளுக்கு உடனடி ஜாமின் வழங்கப்பட்டு இருப்பதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.