சென்னை

ண்ணூர் முகத்துவார ஆக்கிரமிப்பை எதிர்த்து நேற்று சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கில் சென்னை நகரமே மூழ்கியது தெரிந்ததே.  அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளே என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.   தற்போது மீண்டும் மழைக்காலம் வரும் வேளையில் குசஸ்தலை ஆறு எண்ணூரில் கடலில் கலக்கும் இடத்தில் பல ஆக்கிரமிப்புகள் உள்ளது பலருக்கும் மீண்டும் வெள்ள அபாயம் நேரிடுமோ என்னும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.

இதையொட்டி சென்னை கடல் வள மையம் மற்றும் எண்ணூரைக் காப்போம் இயக்கம் ஆகியோர் இணைந்து நேற்று மாலை 3.30 மணிக்கு சென்னை எலியட்ஸ் கடற்கரையில் ஒரு மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.  இது பற்றி சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன், “இந்த விழிப்புணர்வுத் தகவல் அனைவருக்கும் சென்றடையவே இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நடை பெற்றது.  சமீபத்தில் இந்த ஆக்கிரமிப்புகளை பார்வையிட்ட நடிகர் கமலஹாசனும் தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்.   இந்த ஆக்கிரமிப்புகளால் ஆற்று நீர் கடலில் செல்வது தடுக்கப்படுவது மட்டுமின்றி வட சென்னை முழுவதுமே வெள்ளத்தால் மூழ்கும் அபாயம் உள்ளது.  இது வட சென்னைக்கு மட்டுமின்றி சென்னை நகரம் முழுமைக்குமே ஆபத்தை ஏற்படுத்தும்” எனக் கூறினார்.

இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்ட மீனவர்கள் இந்த ஆக்கிரமிப்புகளால் மீன் வளம் மிகவும் குறைவதால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.   மற்றொரு சமூக ஆர்வலர், “சென்ற வருடம் மட்டும் வெள்ளத்தினால் வட சென்னையில் 10 லட்சம் மக்கள் பாதிப்பு அடைந்தனர்.  அது மட்டும் இன்றி எண்ணூர், மற்றும் மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் உட்பட பல தொழிற்சாலைகளில் வெள்ளம் புகுந்து பெரும் நஷ்டத்தை உண்டாக்கியது.   இந்த மனிதச் சங்கிலி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்ற நம்பிக்கையில்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என கூறி உள்ளார்.

Image courtesy : THE NEWS MINUTE