(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!)

1940க்கு பிறகான காலங்கள்தான், காமராஜரின் அரசியல் திறத்திற்கு சான்றுகள் என்றில்லை. கடந்த 1930ம் ஆண்டு தொடக்கம் முதலே அவர் தன்னை பெரியளவில் நிரூபித்து வந்தார்.
கடந்த 1920ம் ஆண்டுகளிலேயே, பெரியார், வரதராஜூலு நாயுடு மற்றும் திரு.வி.க. ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்கள்தான். அப்படியிருந்திருந்தாலும், பெரியார் போன்றவர்களால், சமூகநீதி தொடர்பான விஷயங்களை காங்கிரஸில் முன்னெடுக்க முடியாத சூழல்தான். இந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான், 1925ம் ஆண்டு பெரியார், காங்கிரஸிலிருந்து வெளியேறுவது.

வரதராஜூலு நாயுடு

அதன்பிறகு, சுயமரியாதை இயக்கம் தொடங்கி, அவர் மேற்கொள்ளும் தீவிரப் பிரச்சாரம், பின்னாளில், காங்கிரஸ் கட்சியில் காமராஜருக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதுடன், பிராமண ஆதிக்கத்தை பெரியளவில் சுருக்கி, தமிழ்நாடு காங்கிரஸில் பிராமணரல்லாதோர் ஆதிக்கத்தைக் கொண்டுவந்து, அவருக்கான ஒரு சிறந்த அடித்தளத்தை அமைத்துக்கொள்ள உதவுகிறது.
(வரலாற்றில் ஒருவரின் உழைப்பு, மற்றவருக்கு எதிர்பாராத வகையில் பெரிய பலனைத்தரும் நிகழ்வுகள் ஏராளம். தமிழ்நாட்டில் திராவிட இயக்கச் செயல்பாடுகளின் விளைவால் உண்டான எழுத்து வாசனை, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் உதவியது என்பார்கள்!)
திரு.வி.க

கடந்த 1940ம் ஆண்டு, கட்சித் தலைவர் பதவியில் அமர்ந்த காமராஜர், அதன்பிறகு 1954ம் ஆண்டுவரை, மீண்டும் மீண்டும் 4 முறை (1946, 1948, 1950, 1952)  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். 1952ம் ஆண்டு, ராஜாஜி முதல்வர் பதவியில் அமர்ந்த பிறகு, அவருக்கு தோதாக செயல்படும் வகையிலான ஒருவர் கட்சித் தலைவர் பதவியில் அமர்வதற்காக, காமராஜர் தன் பதவியை ராஜினாமா செய்தார் என்று கூறப்படுவதுண்டு.
ஆனால், அரசியல் சித்தாந்தப்படி இதில் உண்மையிருக்க முடியாது. தமிழக காங்கிரசில், தான் யார்? என்பதை தனது அரசியல் எதிரிகளுக்கு காட்டுவதற்காக அவர் ஆடிய ஒரு சிறிய ராஜதந்திர ஆட்டம்தான் இது! (காமராஜர், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென்று எதிர் தரப்பினர் திடீர் குரலெழுப்பினர் என்பதையும் கவனிக்க வேண்டும்).
சுப்பராயன்

காமராஜர் ராஜினாமா செய்யும் நிலையில், அப்பொறுப்பில் தனது ஆதரவாளராக மாறியிருந்த குமாரசாமி ராஜாவை அமர வைக்க விரும்பினார் ராஜாஜி. ஆனால், முந்தைய ஆண்டுகளில் தன் ஆதரவாளராய் இருந்து, தன் ஆதரவில் முதல்வர் பதவியில் அமர்ந்து, பின்னர் ராஜாஜியின் பக்கம் போய்விட்ட குமாரசாமிக்கு சம்மதம் தெரிவிப்பாரா காமராஜர்? அவரின் சாய்ஸ் முன்னாள் முதல்வர் சுப்பராயன். தான் பதவியை விட்டு இறங்கினாலும், தனக்கு வேண்டியவரையே பதவியில் அமர்த்த முடிகிறது அவரால். அந்தளவிற்கு இருக்கிறது தமிழக காங்கிரஸ் கட்சியில் காமராஜரின் செல்வாக்கு!
ஆனால், அப்பதவியில் அமரும் சுப்பராயனால், அடுத்த 8 மாத காலத்திற்குத்தான் அதில் நீடிக்க முடிகிறது. பெயரளவுக்குத்தான் சுப்பராயன் தலைவர். உண்மையான லகானைப் பிடித்திருந்தவரோ காமராஜர்.
கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டி ஏற்படுகிறது. அப்பதவிக்கு தனது விருப்பமான பக்தவச்சலத்தைக் கொண்டுவர விரும்புகிறார் ராஜாஜி. ஆனால், காமராஜரிடம் மீண்டும் தோற்கிறார்!
(தான் பதவியை விட்டு இறங்கினாலும், தன் விருப்பமானவரை அதில் அமரவைக்க முடிந்தது காமராஜரால்… ஆனால், ராஜாஜி 1954ம் ஆண்டு முதல்வர் பதவியிலிருந்து இறங்கியபோது, தன் விருப்பப்படி சி.சுப்ரமணியத்தை அதில் அமர்த்த முடியவில்லை.) கட்சித் தலைவர் பதவியையும் கைப்பற்ற முடியவில்லை.
அன்றைய சென்னை மாகாண காங்கிரஸில் காமராஜருக்கு நிகரான அரசியல் சாதுர்யமிக்க நிபுணர் எவரும் இல்லை என்பதை அடித்துச் சொல்லிவிடலாம்! ராஜாஜிக்கு ஒரு சிறந்த அறிஞர், மாபெரும் அறிவாளி என்ற பெயர்களெல்லாம் உண்டு. “ராஜாஜி, தனது மனசாட்சி” என்று காந்தியடிகளையே சொல்ல வைத்தவர்தான் அவர்.
ஆனால், என்ன செய்ய? காமராஜர் விஷயத்தில் அவரால் நீந்திக் கரைசேர முடியவில்லை. ஸ்ரீனிவாச ஐயங்காரை வென்றார், சத்தியமூர்த்தியை வென்றார், இன்னும் பலரை வென்றார்! ஆனால், காமராஜரை வெல்ல முடியவில்லை.
 
முத்துரங்க முதலியார்

காங்கிரஸ் கட்சியிலிருந்து 1942ம் ஆண்டு கருத்து வேறுபாடுகளால் (வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக) வெளியேறும் ராஜாஜி, அதன்பிறகு கட்சிக்குள் மீண்டும் நுழைய முயல்கிறார். ஆனால், 1942ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியதன் மூலம் ஒரு பெரிய அரசியல் தவறை செய்கிறார் ராஜாஜி. அரசியலிலிருந்து திடீரென்று ஓய்வு பெறுவது அவருக்குப் புதிதில்லைதான். அதற்கு முன்னதாக, 1932 மற்றும் 1936ம் ஆண்டுகளில், தனது பொதுவாழ்க்கை ஓய்வை அறிவித்தவர்தான் ராஜாஜி.
1942ம் ஆண்டு காமராஜர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, காங்கிரஸை விட்டு வெளியேறுவதென்பது, அரசியல்ரீதியாக ஒரு மோசமான முடிவு. அவரின் இந்தச் செயல்பாடு, கடந்த 1930ம் ஆண்டுகளிலேயே கட்சியில் தன் பிடியை வலுவாக்கிக் கொண்ட காமராஜர், மேலும் தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள உதவியது.
இதன் பலனை, அதற்கடுத்த ஆண்டுகளில் நன்றாகவே அனுபவித்தார் ராஜாஜி. 1945ம் ஆண்டு, திருச்செங்கோட்டிலிருந்து காங்கிரஸ் நாடாளுமன்ற கமிட்டிக்கு ராஜாஜி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, கட்சியில் உறுப்பினராகவே மீண்டும் இணையாமல், திடீரென நாடாளுமன்ற கமிட்டிக்கு தேர்வு செய்யப்படுகிறார் ராஜாஜி. (1946 தேர்தலை மனதில் வைத்தே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்..!)
ஆனால், இதை காமராஜரின் அணியினர் விடுவதாக இல்லை. அந்தத் தேர்தலையே செல்லாததாக்குகின்றனர் மிகவும் சாமர்த்தியமாக..! அதன்பிறகு 1946ம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க, ராஜாஜிதான் மீண்டும் முதல்வராக வேண்டுமென்பது காந்தியடிகளின் பெருவிருப்பமாக இருக்கிறது. அதை அவர் நேரடியாகவே தெரிவிக்கிறார். அவர் மட்டுமின்றி, டெல்லி காங்கிரஸ் தலைமையில் வேறு பலரின் விருப்பமும் அதுதான்.

ஆனால், சென்னை மாகாண காங்கிரஸில் காமராஜர் அணியினர் இதை விடுவார்களா? அவர்கள் ராஜாஜியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவரை வழிமொழிந்து கட்சித் தலைமை அனுப்பிய தீர்மானத்தை, ஓட்டெடுப்பின் மூலம் நிராகரிக்கிறது காமராஜர் தலைமையிலான சென்னை மாகாண காங்கிரஸ். மேலும், விரும்பும் பெயர்கள் அடங்கியப் பட்டியலை அனுப்பி வையுங்கள் என்ற டெல்லி தலைமையின் கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது. இந்த களேபரத்தில் ஆந்திராவின் டி.பிரகாசம் முதல்வர் பதவிக்கான கோதாவில் குதிக்கிறார். ஆனால், அவர் காந்தியின் விருப்பமுமல்ல, காமராஜரின் விருப்பமுமல்ல.
டி.பிரகாசம்

இந்தச் சூழலில், முத்துரங்க முதலியாரை முதல்வர் பதவிக்காக ஆதரிக்க தயாராகிறார் காமராஜர். ஆனால், சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் டி.பிரகாசம் முதல்வராகிவிடுகிறார்.
நாளை மீண்டும் படிக்கலாம்
 
– மதுரை மாயாண்டி