உலகின் அதிநவீன உளவு மென்பொருள் இஸ்ரேல் நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ ஸ்பைவேர்.

கணினி மட்டுமின்றி மொபைல் போன்களிலும் கனகச்சிதமாக வேலை செய்யும் இந்த ஸ்பைவேர், தனது மொபைல் ஹேக் செய்யப்படுவதை ஒருவருக்குத் தெரியாமலேயே எந்த வித தடயமும் இன்றி அனைத்துத் தகவலையும் சேகரிக்கும் தொழில்நுட்பம் பெற்றது.

மொபைல் போன் பேச்சுகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் தகவல்கள், வாட்ஸ்அப் போன் கால்கள், கேமரா உள்ளிட்ட அனைத்தையும் துல்லியமாக தொலைநிலையில் இருந்து இதன் மூலம் இயக்க முடியும்.

எந்த நபரின் மொபைல் போனை ஹேக் செய்யவேண்டும் என்று தீர்மானித்த பின், போலி இணையதள இணைப்பை அந்த நபரின் வாட்ஸ்அப் தகவலில் அனுப்பி அதை அவர்கள் உள்நுழைவதைக் கொண்டு அவர்களின் மொபைல் போனுக்குள் நுழைந்துவிடும் இந்த ‘பெகாசஸ்’ ஸ்பைவேர் அதனை இயக்குபவரின் சொல்படி இயங்க ஆரம்பிக்கும்.

இணையதள இணைப்பு மட்டுமன்றி, வாட்ஸ்அப்பில் மிஸ்ட் கால் கொடுத்தும் உள்நுழைந்து விடுவதோடு, அது எப்படி உள்நுழைந்தது என்று வந்த சுவடே தெரியாமல் அழித்து விடுகிறது.

மேலும், இந்த ஸ்பைவேரை தொடர்ந்து 60 நாட்கள் இயக்காமல் இருக்கும் பட்சத்தில் அது தானாக அந்த மொபைலில் இருந்து நீங்கிவிடும். பேஸ்புக், ட்விட்டர் என்று சமூக ஊடகங்கள் மூலமும் உள்நுழையக்கூடிய இதன் தடத்தை அந்த சமூக வலைதள நிறுவனங்களாலும் கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி, பல்வேறு அதிநவீன சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த மென்பொருளை, தனிநபர் பயன்பாட்டுக்குத் தருவதில்லை என்றும் அரசாங்கங்கள் கேட்டுக்கொண்டால் மட்டுமே அவற்றுக்கு விற்கப்படுகிறது என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

50 பேரின் மொபைலை ஹேக் செய்ய கூடிய உரிமத்திற்கு 50 முதல் 60 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று சொல்லப்படும் இந்த ‘பெகாசஸ்’ ஸ்பைவேரை பெரு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் மட்டுமே வாங்கமுடியம் என்பது நிதர்சனம்.

அரசாங்கங்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்பைவேரில் இருந்து காத்துக்கொள்ள முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.