லக்னோ:
உ.பி. மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகளை, உ.பி.க்குள் அனுமதிக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக மாநில அரசு மறுத்து விட்டதால், ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட பேருந்துகள் அனைத்தும் காலியாக திரும்பிச் சென்றன. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தாததால், வெறும் வயிறுடன் கண்ணீரோடு குடும்பத்துடன் கால்நடையாகவே தங்களது சொந்த ஊரை நோக்கி நடந்து செல்கின்றனர்.
கண்ணீரை வரவழைக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உள்பட பல அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், எந்தவொரு மாநில அரசுகளும் செவிசாய்க்காமல் செவிடன் காதில் ஊதிய சங்கு போல செயல்பட்டு வருகின்றன.
இதையடுத்து, உ.பி. மாநிலத்தில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்வதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்தார். அந்த பேருந்துகளுக்கு அனுமதி வழங்கும்படி முதல்வர் யோகிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, ராஜஸ்தான் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பேருந்துகள் உள்பட வாகனங்கள் உ.பி. மாநில எல்லையில் அணிவகுத்தன.
இந்த நிலையில், வாகனம் தொடர்பான பல்வேறு காரணங்களை கூறி, வெளி மாநில பேருந்துகள் உ.பி.க்குள் வர யோகி தலைமையிலான பாஜக அரசு மனுமதி வழங்க மறுத்து விட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், யோகியின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
முதல்வர் யோகி புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மலிவான அரசியல் செய்கிறார், அவர்கள் இந்தியர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் முதுகெலும்பு. நாடு அவர்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் இயங்குகிறது. இது அனைவரின் பொறுப்பு. இது அரசியலுக்கான நேரம் அல்ல: என பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்தார்.
இந் நிலையில், பிரியங்கா காந்தி அனுப்பிய பேருந்துகளை உ.பி.க்குள் யோகி அரசு மறுத்ததால் அனைத்து பேருந்துகளும் உ.பி. எல்லையில் இருந்து காலியாக மீண்டும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு திரும்புகின்றன..
வயிற்றுப்பசியோடு சொந்த ஊருக்கும் செல்ல விரும்பும் மக்களைக்கூட, பேருந்தில் செல்ல அனுமதிக்காத யோகியின் கல்மனம், கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது…
இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது..