டில்லி
பிரதமர் மோடி உருவாக்கிய பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் அளிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.
கொரோனா தாக்குதல் நிவாரணத்துக்காக மத்திய மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன. இதற்காக மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் என்னும் நிதியை உருவாக்கினார். அதன் கணக்குகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல் செய்தியாளர்களை சந்தித்த போது பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.
கபில்சிபல், “நான் முதலில் பிரதமர் மோடியிடம் அவர் உருவாக்கிய பிஎம் கேர்ஸ் நிதியத்திலிருந்து கரோனா ஊரடங்கு பாதிப்பு தொழிலாளர்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது? எனக் கேட்க விரும்புகிறேன். அவர் இந்தக் கேள்விக்கு விடை அளித்துத்தான் ஆகவேண்டும்.
ஊரடங்கு நேரத்தில் சில தொழிலாளர்கள் நடந்து செல்லும்போது இறந்துள்ளனர், சிலர் ரயில்களில் இறந்துள்ளனர் மற்றும் சிலர் பசி, பட்டினியில் இறந்துள்ளனர்.
உங்களுக்கு பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 12-ஐ சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதில் பேரிடர் காலங்களில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கும் வாழ்க்கையை இழந்தவர்களின் வாழ்வாதாரத்துக்கான நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு நெருக்கடியில் இறந்தவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்ததா? அத்துடன் இந்தச் சட்டத்தில் கணவனை இழந்த பெண்களுக்கும் அநாதைகளுக்கும் நிவாரணம் வழங்கும் பிரிவும் உள்ளது. இது போன்றோருக்கு இந்த அரசு என்ன கொடுத்தது, எவ்வளவு கொடுத்தது? என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இனி வரும் நாட்களில் நம் நாடு பொருளாதாரத்தில் எதிர்மறை பகுதிக்குச் செல்லவிருக்கிறது. ரிசர்வ் வங்கியும் இதை உறுதிப்படுத்தி உள்ளது.
நாட்டில் 45 கோடி தொழிலாளர்கள் உள்ளனரே, அவர்களது நிலை என்ன? நாம் எதிர்காலம் என்னவென்பதைப் பார்க்கவேண்டும் என இதனால்தான் கூறுகிறேன்.
ஆகவே கடந்த 6 ஆண்டுகளாக இந்த அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களையெல்லாம் ஓரமாக வைத்து விட்டு ஏழைகளை மீட்க புதிய கொள்கைகளை வடிவமைக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.