சென்னை: இன்னும் எத்தனை காலம் தான் மற்ற கட்சிகளை சார்ந்திருப்பது? என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசிய நிலையில், அதற்கு காங்கிரஸ் மூத்த இவிகேஎஸ் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசியதில், கட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
“நாம் பிறரைச் சார்ந்தே இருக்கப்போகிறோமா? அல்லது சுயமாக இருக்கப்போகிறோமா? என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும் என செல்வப்பெருந்தகை அரங்கத்தில் இருந்த தொண்டர்களிடம் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு மாறாக, இவிகேஎஸ் இளங்கோவன் பேசியதால் கூட்டத்தினரிடையே பரபரப்பு காணப்பட்டது.
தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் காமராஜர் அரங்கில் நேற்று (ஜுன் 11ந்தேதி) நடைபெற்றது. . கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய செயலாளர் சிரி வெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட சுமார் 1500 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- காங்கிரஸ் கட்சிக்கென்று தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது.
அதை விரிவுபடுத்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியை அனைத்து நிலையிலும் செயல்படுகிற அமைப்பாக முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும். செயல்படாத கட்சி அமைப்பு களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை விரிவுபடுத்தி உறுதிபடுத்த வேண்டும், ராகுல்காந்தியின் தமிழக கனவு மெய்ப்படுகிற வகையில் செயல்பட வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலிமை படுத்துவதற்கு எத்தகைய வியூகத்தை வகுக்கிறாரோ, அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு அவரது முயற்சிகள் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய செல்வபெருந்தகை, தமிழகத்தில், காங்கிரசின் தற்போதைய நிலை பற்றிய தனது வேதனையை தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தினார். தமிழகத்தில் எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்கப்போகிறோம் என்பது தெரியவில்லை. எனவே வரும் காலங்களில் எந்த திசையில் பயணிக்கப் போகிறோம் என்பதை தொண்டர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதற்கும் தொண்டர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் மாநில தலைவரும், மூத்த தலைவருமான இவிகேஎஸ் இளங்கோவன், “சில பேர் பேசியது பெரிய மேதாவிகள் போல் என் காதில் விழுந்தது. காரணம் ஒரே நேரத்தில் இரு பெரும் பதவிகள் வகித்ததால் என்று செல்வபெருந்தகை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், செல்வப்பெருந்தகைக்கு கோரிக்கை வைக்க விரும்புகிறேன் என்று தனது பேச்சை தொடர்ந்தார். அப்போது,
தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவின் தோல்வியைக் குறித்து பேசும்பொழுது கட்சியில் சமூக விரோதிகள் உள்ளார்கள். நாம் தோல்வியை தழுவியுள்ளோம் எனக் கூறினார். அதேபோல், காங்கிரஸ் கட்சியில் உள்ள சமூக விரோதிகளை தூக்கி ஏறிய வேண்டும்.
மோடி ஒவ்வொரு நாளும் பிரதமராக இருப்பது நமது தலைவர்களின் உயிருக்கு ஆபத்து. இன்று திங்கள்கிழமை, அடுத்த திங்கட்கிழமைக்குள் சந்திரபாபு நாயுடு என்ன செய்கிறார் என்று பார்ப்போம். பின்பு மோடியும், அமித்ஷாவும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
காந்தியையும், நேருவையும் தெரியாது என்று கூறிவிட்டு நேற்றைய பதவி ஏற்பின் பொழுது காந்தியின் புகைப்படத்தை பின்னால் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார் கள். எதிரிகளை ஒழிக்காமல் எப்படி நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைக்க முடியும்? உயிரைப் பணயம் வைத்து நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்.
நேரு தன் சிந்தனை பலத்தால் அன்று நமது நாட்டையும், இந்திய மக்களையும் தூக்கி நிறுத்தினார். ரஷ்யாவும் வேண்டும், அமெரிக்காவும் வேண்டும் என்று நடுநிலையாக இருந்தார். இன்று 10 எம்பிகள் கிடைத்துள்ளார்கள் என்றால், அதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும், முதலமைச்சர் ஸ்டாலினும் காரணம் என்பதை மறந்து விட முடியாது.
மோடியின் ஒவ்வொரு நாள் ஆட்சியும் நாட்டிற்கு ஆபத்து என்பதை விட தலைவர்கள் மூன்று பேரின் உயிருக்கும் ஆபத்து” என தெரிவித்தார்.
பின்னர் பேசிய செல்வபெருந்தகை, “இங்கு பேசியவர்கள் அவர்களின் கருத்தை கூறியுள்ளார்கள். அது கட்சியின் கருத்தல்ல. அடிமை இந்தியாவாக பிரிட்டிஷிடம் இருக்கும் பொழுது மகாத்மா காந்தியடிகள் ஆயுதம் இல்லாமல் எந்த நம்பிக்கையை வைத்து பிரிட்டிஷ்காரரை விரட்டினாரோ, இந்த தேசத்திற்கு விடுதலை பெற்று தந்தாரோ அதே நம்பிக்கையே காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதில், மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்த தேர்தல் ஒரு முன் உதாரணமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது. காங்கிரஸ் பேரியக்கத்திற்கு என்று ஒரு பார்வை இருக்கிறது. ஜவஹர்லால் நேரு அவர்களின் காலம் வேறு, இன்று தலைவர் ராகுல் காந்தி காலம் வேறு, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் காங்கிரஸ் பேரியக்கம் ஒரு பரிணாம வளர்ச்சியை கண்டிருக்கிறது.
ஆனால், நாம் இருப்பது இது ராகுல் காந்தியோட காலம் என்பதை ஒவ்வொருவரும் பேசும்போது மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும். இன்றைக்கு தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் சில இடங்களிலே வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். ஆனால், தேசிய பார்வை காங்கிரஸ் தோழர்களுக்கு என்றென்றும் இருக்க வேண்டும். தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் 1989 ஆம் ஆண்டு தனியாக நிற்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். எதற்காக தனியாக நிற்க வேண்டும் என்று முடிவெடுத்தார் பாசிச சக்திகள் வளர்ந்து விடுவார்கள் என்று தானே.
காங்கிரஸ் பேரியக்கத்திற்கு வேறு வழி இல்லை என்று நினைத்திருந்தால் அவரும் 1989 ஆம் ஆண்டு கூட்டணியில் தான் இருந்திருப்பார். நாம் யார் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும், கட்சியை வலிமைப்படுத்த வேண்டும். வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும். இல்லையென்றால், நான் தலைவர் பதவியில் இருக்கமாட்டேன் உங்களோடு ஒருவனாக நானும் இருப்பேன்.
உண்மையும், ஒற்றுமையும் தான் காங்கிரஸ் பேரியக்கத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். வெறுப்பு அரசியல் என்பது காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் அல்ல. அது பாஜகவின் சித்தாந்தம். உழைப்பவர்களையும், ஒற்றுமையாக இருப்பவர்களையும் இந்த கட்சி என்றைக்கும் கைவிடாது விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பாத யாத்திரை நடத்துவோம்” என தெரிவித்தார்.
இதற்கிடையே முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்தார். பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி தொகுதியை மீண்டும் கேட்டார். ஆனால் அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் வேறு தொகுதிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்ப டவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வரும் திருநாவுக்கரசர் இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்து.