டெல்லி:
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பணம் வழங்க முடியாவிட்டால் மோடிகேர் நிதி எதற்கு? என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
கொரோனா ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் இன்று முதல் சில தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கலாம் என்று மோடி அரசு தெரிவித்தது. இதற்காக மாநில அரசின் வேண்டுகோளின்படி இடைநில்லா ரயில் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் பயணம் செய்யும் தொழிலாளர்கள் டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.
இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரயில் பயணத்தை ஏற்பாடு செய்ய முடியாவிட்டால் பிஎம் கேர்ஸ்க்கு நிதி உதவி பெறுவது எதற்காக என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக கேள்வி எழுப்பி டிவிட்பதிவிட்டுள்ளார்.
அதில், “பசி பட்டினியால் வாடும் இடம் பெயர் தொழிலாளர்களிடமிருந்து இவ்வளவு அதிகமான கட்டணத்தை வசூலிக்கும் இந்திய அரசின் செயல் எவ்வளவு மோசமானது…
வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இலவசமாக இந்திய அரசு அழைத்துவந்தது. இந்திய ரயில்வே தொழிலாளர்களை இலவசமாக அனுப்ப மறுக்கிறது என்றால் பிஎம் கேர்ஸ்க்கு எதற்காக நிதி உதவி செய்ய வேண்டும்?
இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அலுவலகத்தில் பேசினேன். மத்திய அரசு 85 சதவிகிதமும் மாநில அரசு 15 சதவிகித கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இடம் பெயர் தொழிலாளர்கள் இலவசமாக அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்குப் போய் சேர வேண்டும். அமைச்சரகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் இதை தெளிவுபடுத்த வேண்டும்.
சுப்பிரமணியசாமியின் அதிரடி கேள்வி பாஜக தலைமையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.