சென்னை:
சரிநிகர் சமமான சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை பிரதமர் மோடி நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு, அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் பாதுகாப்புத் துறை நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், சரிநிகர் சமமான சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக பேசினார்.
பாதுகாப்புத்துறை கண்காட்சி கோவா தவிர வேறு எங்கும் நடந்ததில்லை. அதனை தமிழகத்துக்கு கொண்டுவந்துள்ளோம் என்றார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு பதில் அளித்துள்ள அதிமுக மூத்த தலைவர் கே.பி முனுசாமி, “எந்த கனவை மோடி நிறைவேற்றினார். சரிசமமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவர்கள் கனவை மோடி நிறைவேற்றினாரா? தொழிற்துறை. சமூக நலத்துறை, கல்வி ஆகியவற்றில் சரிசமத்தை உருவாக்க வேண்டும்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்த திட்டங்கள் எதையாவது ஒன்றை, குஜராத்தில் முதல்வராக இருந்தபோது மோடி செயல்படுத்தினாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்துணவுத் திட்டத்தை மேம்படுத்தி வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கு சீருடை, நிதியுதவி வழங்கியவர் எம்ஜிஆர். இதை குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி செய்தாரா?
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கல்வியில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தினார். இதையெல்லாம் மோடி செய்திருக்கிறாரா?
இதையெல்லாம் மோடி செய்திருந்தால் தான், எங்கள் தலைவர்களின் கனவை அவரால் நிறைவேற்ற முடியும் என்று முனுசாமி கூறியுள்ளார்.