பெண் கல்வி, சுகாதாரம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு, பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், பணியிட பாதுகாப்பு போன்ற அம்சங்களை வைத்து சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு வருடாவருடம் அறிக்கை வெளியிடுகிறது. இது சர்வதேச பாலின இடைவெளி அறிக்கை என்று அழைக்கப்படுகிறது.
எளிய வார்த்தைகளில் சொன்னால், ஒவ்வொரு நாட்டிலும் பெண்கள் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான ஆய்வு இது.
தற்போது 2017-ம் ஆண்டுக்கான சர்வதேச பாலின இடைவெளி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆண் – பெண் இடையே பாலின இடைவெளியைக் குறைப்பதில் ஐஸ்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. 88% சதவீதம் பாலின இடைவெளியை இந்நாடு குறைத்துள்ளது. அதாவது ஆண் – பெண் இருவரும் பெரும்பாலும் சம உரிமை பெற்றவர்களா இருக்கிறார்கள்.
இந்த கணக்கீடு வெளியிடத் தொடங்கிய 2006-ம் ஆண்டிலிருந்து ஐஸ்லாந்து முதல் இடத்தில் இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து, முறையே நார்வே (2), பின்லாந்து (3), ருவாண்டா (4), ஸ்வீடன் (5), நிகாராகுவா (6), ஸ்லோவேன்யா (7), அயர்லாந்து (8), நியூசிலாந்து (9) மற்றும் பிலிப்பைன்ஸ் (10) ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியாவின் நிலை என்ன?
நம் இந்தியாவின் நிலை பெண் சமத்துவத்தில் கவலைக்கிடமாகவே உள்ளது. முன்பைவிட மேலும் பின்னடைவு ஏற்பட்டு 108-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடுகளான சீனா, வங்கதேசத்தை விட பின்தங்கியிருக்கிறோம்.
இந்த நிலை மாறி ஆண் பெண் சமத்துவம் இந்தியாவில் ஏற்பட இன்னும் 100 ஆண்டுகள் தேவைப்படும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
பெண்களை மதிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தாயே தாயே என்று உருகுவது, பெண் தெய்வ வழிபாடுகள், நதிகளுக்கு பெண்கள் பெயரை வைப்பது, நாட்டை பெண் என்ற குறியீட்டில் குறிப்பது போன்ற ஏட்டுச்சுரைக்காய் முயற்சிகளால் எந்தவித மாற்றமும் ஏற்படாது.
இன்னமும் பெண் கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு உரிய பணிகள் கிடைக்க வாய்ப்பு அளிக்க வேண்டும், பொருளாதாரத்தில் பெண்கள் தன்னிறைவு அடைய வேண்டும்.
இதையெல்லாம் விட, சமூகத்தில் அவர்களுக்கு உரிய பங்கை – மரியாதையை அளிக்க வேண்டும்.
“ஒழுக்கக் குறியீடுகள்” எல்லாம் பெண்களை நோக்கியே சுட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
நடக்குமா?