வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

 ஜூலை 30  அன்று  கேரள மாநிலம் வயநாட்டில்  அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால்  சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 250 பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,   வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் குறித்த தகவலை கேரள அரசு வெளியிட்டு உள்ளது. அந்த பகுதியில்   நிரந்தரமாக குடியேறிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 21 பேர் மற்றும் தமிழகத்தில் இருந்து வேலைக்கு சென்று தற்காலிகமாக வயநாட்டில் வசித்து வந்த 3 பேர் என மொத்தம் 24 பேர் இந்த நிலச்சரிவில்  உயிரிழந்துள்ளனர்.

மேலும், வேலை நிமித்தமாக தற்காலிகமாக வயநாட்டில் வசித்து வந்த தமிழர்கள் 3 பேர் மாயமாகி இருப்பதாகவும்,  வயநாட்டில் நிரந்தரமாக குடியேறிய தமிழர்கள் 22 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்காக சென்றவர்களில் ஒருவரும், குடியேறியவர்களில் 129 பேரும் என மொத்தம் 130 தமிழர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என கேரள அரசு தெரிவித்து உள்ளது.