டெல்லி: நாடு முழுவதும் மற்றும் தமிழ்நாட்டிலும், மது, கஞ்சா, போதை மாத்திரைக்கு அடிமையானவர்கள் எவ்வளவு பேர் என்ற விவகாரம் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் 15 கோடியே 1 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு மதுப்பழக்கம் உள்ளதாகவும், மது குடிப்பில் நாட்டிலேயே முதலிடத்தில், பாஜக ஆட்சி செய்யும்  உத்திரபிரதேசம் உள்ளது என்றும், நாடாளுமன்றத்தில் சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் பெகாசஸ் சர்ச்சைக்கு இடையே அவ்வப்போது சிறிது நேரம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தின்போது, உறுப்பினர் ஒருவர், நாட்டில் மதுப்பழக்கம், கஞ்சா, போதை மாத்திரைக்கு எவ்வளவு பேர் அடிமையாக உள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு மத்திய சமூக நீதி அமைச்சகம் அளித்துள்ள  எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளதாவது,

நாடு முழுவதும் 15 கோடியே 1 லட்சத்து 16,000 பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது

உத்தரப்பிரதேசத்தில் 3 கோடியே 86 லட்சத்து 11,000 பேருக்கு மதுப்பழக்கம் உள்ளது. இது நாட்டிலேயே அதிகம்.

தமிழ்நாட்டில் 90 லட்சம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது தெரிய வந்துள்ளது.

அதுபோல, நாடு முழுவதும் 2 கோடியே 90 லட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 1 கோடியே 20 லட்சத்து 31,000 பேர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் 1 லட்சத்து 4,000 பேர் கஞ்சா பயன்படுத்துகிறார்கள்.

மேலும்,  போதை மாத்திரைக்கு  நாடு முழுவதும் 1 கோடியே 86 லட்சத்து 44,000 பேர்  அடிமையாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் 1 லட்சத்து 54,000 பேர் போதை மாத்திரைக்கு அடிமையாக உள்ளனர்.

போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்கும் பணியில் 8 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 850-க்கும் அதிகமான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களும் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.