(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!)

1946 தேர்தலையொட்டிய களேபரங்கள் நடப்பதற்கு முன்னதாகவே, அதேயாண்டில், தமிழகத்திற்கு ஒரு விழாவிற்காக வந்து செல்கிறார் காந்தியடிகள். அப்போது, சென்னை மாகாண காங்கிரஸில் நிலவும் சூழலை அவர் உணர்கிறார்.
ராஜாஜி, முதல்வராவதற்கு தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவிக்கும் காந்தியடிகள், “அந்த விருப்பத்திற்கு எதிராக சென்னை மாகாண காங்கிரஸில் ஒரு குழு செயல்படுகிறது” என்ற பொருளில் தனது ‘ஹரிஜன்’ பத்திரிகையில் எழுதுகிறார். இந்த ‘குழு’ என்ற வார்த்தை தன்னையும், தனது அணியினரையும்தான் குறிக்கிறது என்பதை உணர்ந்த காமராஜர், கடும் அதிருப்தியடைந்து தனது நாடாளுமன்ற கமிட்டி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். ஆனால், தனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள காந்தியடிகள் தயாரில்லை. அதேசமயம், காமராஜரும் தனது நிலையில் உறுதியாக இருக்கிறார்.
இறுதியில், வரதராஜூலு நாயுடு, பட்டாபி சித்தராமையா போன்றோர், காமராஜருக்கு ஆதரவாக, காந்தியாரை சந்தித்துப் பேசினர். சென்னை மாகாண காங்கிரஸ் விஷயத்தில் காந்தியார் தலையிட வேண்டாம் என்று கோரிக்கை வைக்குமளவிற்கு காமராஜர் வலுவடைந்திருந்தார் கட்சியில். (கடந்த 1920களிலேயே காங்கிரஸ் தலைவராக இருந்த வரதராஜூலு நாயுடுவுக்கு, காங்கிரஸ் அமைச்சரவையில், 1950களில் இடம்தரப்படவில்லை என்பதை, காமராஜர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், பெரியார் சுட்டிக்காட்டிய சம்பவம் பதியப்பட்டுள்ளது.

கடந்த 1919ம் ஆண்டு பெரியாரை காங்கிரஸ் கட்சிக்கு கொண்டுவரும் முயற்சியில் ஆச்சாரியாரோடு இணைந்து செயல்பட்டவர் இந்த ராசிபுரம் நிலக்கிழார் வரதராஜூலு. வரதராஜூலு நாயுடு, கடந்த 1925ம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையைத் துவங்கியவர். பின்னர், 1931ம் ஆண்டு ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்ற ஆங்கில நாளேட்டைத் தொடங்கினாலும், நிதி நெருக்கடி காரணமாக, அப்பத்திரிகை நிறுவனத்தை குறுகிய காலத்திலேயே வேறொருவருக்கு விற்பனை செய்துவிட்டார்.)
திருச்செங்கோட்டிலிருந்து ராஜாஜி தேர்வுசெய்யப்பட்டு காங்கிரஸ் நாடாளுமன்ற கமிட்டி உறுப்பினரானதை, கட்சிக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கை மீறிய செயல் என்று அதைக் கடுமையாக எதிர்த்து, அந்தத் தேர்தலையே ரத்துசெய்ய வைத்த காமராஜர், 1946ம் ஆண்டு, முதல்வர் பதவி தொடர்பாக, காந்தியடிகள் உட்பட, காங்கிரஸ் அகில இந்திய தலைமையின் முடிவுகளை, தனது அரசியல் எதிரி(ராஜாஜி) வலுப்பெற்று விடக்கூடாது என்பதன் பொருட்டு கடுமையாக எதிர்த்து புறக்கணித்ததைப் பற்றி நாம் யோசிக்க வேண்டியுள்ளது.
களேபரத்தின் நடுவே புகுந்து, காமராஜர் விரும்பிய முத்துரங்க முதலியாரை டி.பிரகாசம் வீழ்த்தி, முதல்வர் பதவியில் அமர்ந்துவிட்டாலும், அவரை வீழ்த்துவதற்கு நேரம் பார்த்துக்கொண்டுள்ளார் காமராஜர். (தங்குதூரி பிரகாசம், காந்தியாருக்கும் விருப்பமானவர் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்) ஓராண்டு காலத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் டி.பிரகாசம் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார். இதனையடுத்து, தன் சொல் பேச்சைக் கேட்கக்கூடிய ஓமந்தூராரைக் கொண்டு வருகிறார் காமராஜர். அவர் இரண்டுமுறை முதல்வராக தேர்வுசெய்யப்படுகிறார். ஒரு கட்டத்தில், இவரை மீறி, அவர் செல்ல முயற்சிக்க, அவரும் பதவியிலிருந்து இறக்கப்படுகிறார். பின்னர், தனக்கு உகந்தவாறு நடப்பதற்கு தயாராக இருந்த குமாரசாமி ராஜாவை முதல்வராக்குகிறார் காமராஜர். 1949 முதல் 1952 பொதுத்தேர்தல் வரை, குமாரசாமி ராஜாதான் முதல்வர்! (காமராஜர், கூட்டு தலைமைத்துவத்தில் நம்பிக்கையுள்ளவர் என்பதை இங்கே நினைவுகூற வேண்டியுள்ளது. ஒருவர் அரசுப் பதவியில் அமர்ந்துவிட்டார் என்பதற்காக, எதேச்சதிகரமாக செயல்படுவதை விரும்பாதவர் காமராஜர் என்பதற்கு, டெல்லி அரசியலில் அவர் கிங் மேக்கராக இருந்தபோது நிகழ்ந்த சம்பவங்களே சாட்சி. தான் முதல்வராக இருந்த காலத்திலும், காங்கிரஸ் கட்சியின் சூழல்களுக்கு ஏற்றவாறு அவர் அனுசரணையாக நடந்துகொண்டதையும் கவனிக்க வேண்டியுள்ளது.)

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

(இன்றைய ஆந்திரமும் சேர்ந்திருந்த ஒருங்கிணைந்த அன்றைய சென்னை மாகாணத்தில், 1940களில் அடுத்தடுத்து முதல்வர்கள் ஆன இந்த மூவருமே, தெலுங்கர்கள் அல்லது தெலுங்குப் பூர்வீகம் கொண்டவர்கள் என்பதை கவனிக்காமல் கடந்துசெல்ல முடியவில்லை)
1952 தேர்தல் முடிவுகள் குழப்பமானவை. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றாலும், பெரும்பான்மைப் பெறவில்லை அன்றைய ஒன்றிணைந்த சென்னை மாகாணத்தில்! சுயேட்சைகள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டோர் அதிக இடங்களை வெல்கிறார்கள். சோஷலிஸ்ட் கட்சி, கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி, கிரிஷ்கர் லோக் கட்சி, தமிழ்நாடு உழவர் கட்சி, காமன்வீல் கட்சி ஆகியோரும் தங்கள் பங்கினைப் பெறுகிறார்கள்.
ஒருங்கிணைந்த சென்னை மாகாண அரசியல் நிலவரத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக, குழப்பமோ குழப்பம் என்பதை உணர்ந்த காமராஜர், அரசமைக்கும் விஷயத்தில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசமைக்க முயல்கின்றன. ஆனால், இதை விரும்பாத காங்கிரஸ் தலைமையும், ஆளுநரும் நிலைமையை சமாளிக்க ராஜாஜிதான் சரியான ஆள் என்று அவரைக் களமிறக்குகின்றனர். காமராஜர் தரப்பில் எந்த ஆட்சேபமும் இல்லை.
குமாரசாமி ராஜா

அதேசமயம், முதல்வராக பதவியேற்பவர்கள், குறுகிய காலத்தில் சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சொல்லி விடுகிறார் நேரு. இதனால், ராஜாஜிக்கு நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில், வெளியேறும் முதல்வர் என்ற நிலையில் இருக்கும் குமாரசாமி ராஜா, ராஜாஜியை சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கும்படி ஆளுநருக்குப் பரிந்துரை செய்துவிடுகிறார்.
கட்சித் தலைவராகிய தன்னைக் கேட்காமல், குமாரசாமி ராஜா செய்த இந்தப் பரிந்துரை, காமராஜருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை மனதில் வைத்திருந்தே, தான் அதே ஆண்டில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து இறங்கியபோது, அந்த இடத்தில் குமாரசாமியை கொண்டுவர வேண்டுமென்ற ராஜாஜியின் முயற்சியை முறியடித்தார். ராஜாஜியை, அணிசேர விடக்கூடாது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்!
காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில், ராமசாமி படையாட்சி, மாணிக்கவேல் நாயக்கர் உள்ளிட்ட பலரை இணைத்துக்கொண்டு வெற்றிகரமாக சமாளித்தார் ராஜாஜி.
ஆனால், குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பின் காரணமாக, கடந்த 1954ம் ஆண்டில் ராஜாஜி தானாகவே பதவி விலகினார் என்பதுதான் பொதுவான தகவல். ஆனால், அந்தத் திட்டம் தொடர்பாக எழுந்த எதிர்ப்பில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பிளவுபட்டு நின்றனர். திட்டத்திற்கு எதிராக நின்றார் காமராஜர்.
ராமசாமி படையாட்சி

காங்கிரஸின் வருடாந்திர சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், ராஜாஜிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் காமராஜர் அணியால் கொண்டுவரப்படலாம் என்ற தகவல் ஆச்சாரியாருக்கு எட்டவே, எதற்கு அவமானம்! என்று தானாகவே பதவி விலகுகிறார். எனவே, இந்த விஷயத்தில் காமராஜரின் அரசியல் விளையாட்டை நிராகரித்துவிட்டு அந்த காலக்கட்டத்தைக் கடந்துசெல்ல முடியவில்லை.
அதற்கு முன்னதாக, 1953ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டிவிஎஸ் நிறுவன குடும்பத்தாரின் புதுமனைப் புகுவிழா நிகழ்விலேயே இவர்கள் இருவரின் மோதல் வெளிப்படையாகத் தெரிகிறது. ராஜாஜியின் சாதியப் பேச்சால் கடுப்பான காமராஜர், அரசியலில், இளையவர்களுக்கு முதியவர்கள் வழிவிட வேண்டுமென பேசி, ராஜாஜியின் மூக்குடைத்தார்.
கடந்த 1960களில் நாட்டிற்கான இரண்டு பிரதமர்களை நியமிக்கும்போதுதான், காமராஜர் ‘கிங் மேக்கர்’ ஆகவில்லை. கடந்த 1940களில், சென்னை மாகாண முதல்வர்கள் நியமன விஷயத்திலேயே இவருக்கு அந்த அந்தஸ்து கிடைத்துவிட்டது.
கடந்த 1954ம் ஆண்டில் முதன்முறையாக முதல்வர் பதவியேற்ற காமராஜர், ஆட்சித்துறையில் நிர்வாக அனுபவம் இல்லாதவர் என்ற விமர்சனத்தை சந்திக்க வேண்டியிருந்தது. மேலும், அப்பதவியில் அமர்ந்த முந்தைய நபர்களோடு ஒப்பிடுகையில், போதிய கல்விப் பின்புலம் இல்லாதவர் என்ற அடையாளமும் ஒட்டிக்கொண்டிருந்தது அவருக்கு.
முதன்முதலாக அமைக்கப்பட்ட காமராஜரின் அமைச்சரவையில், ராமசாமி படையாட்சி மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரைத் தவிர, மற்றவர்களான, பக்தவச்சலம், சி.சுப்ரமணியம், ஏ.பி.ஷெட்டி, மாணிக்கவேலு நாயக்கர், ராமநாதபுரம் ராஜா ஆகியோர் ராஜாஜி அமைச்சரவையில் இடம்பெற்றவர்களே. ஆக மொத்தம், முதல்வரை சேர்த்து 8 பேர் கொண்ட அமைச்சரவை.
புதிதாக அரசின் தலைமைப் பொறுப்பேற்ற அரசியல் சூழலை சமாளிப்பதற்காக, ராஜாஜியின் அமைச்சரவை சகாக்களாக இருந்த 5 பேரை அப்படியே ஏற்றுக்கொண்டார் காமராஜர் என்று சொல்லப்பட்டாலும், இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது.
மாணிக்கவேலு நாயக்கர்

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 1952ம் ஆண்டு அமைக்கப்பட்ட ராஜாஜி அமைச்சரவையில் (அப்போதைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணம்) மொத்தம் 15 பேர் இடம்பெறுகிறார்கள். ஆனால் 1953ம் ஆண்டு, மொழிவழி தனி மாநிலமாக ஆந்திரா பிரிந்த பின்னர், அமைச்சரவையில் 8 பேர் இருந்தால் போதும் என்கிறார் கட்சித் தலைவர் காமராஜர். ஆனால், பிடிவாதமாக மேலும் 3 பேரை சேர்த்துக்கொண்டு, 12 பேர் அமைச்சரவையாக இருக்கிறது ராஜாஜி கேபினட்.
ஆனால், காமராஜரின் முதல் அமைச்சரவையை கவனித்தோமென்றால், அவர் முன்னர் வலியுறுத்திய அதே 8 பேர் (அவரையும் சேர்த்து) இடம்பெற்றிருப்பதை நாம் காணலாம். இதன்மூலமும் அவர், ராஜாஜிக்கு எதையோ சொல்லியிருக்கிறார்.
காமராஜரின் இரண்டாவது (1957) அமைச்சரவையிலும் 8 பேர் இருக்க, அடுத்த மூன்றாவது அமைச்சரவையில் (1962) இடம்பெற்றவர்கள் 9 பேர்.
தனது அமைச்சரவையில் இணைத்துக்கொண்ட சி.சுப்ரமணியம் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் காமராஜருக்கு வேறுவகையில் மிகவும் தேவைப்பட்டார்கள். சட்டசபை விவாதங்களை கையாளும் பொறுப்பை பல நேரங்களில் அவர்களிடமே விட்டுவிட்டார் காமராஜர். அவருக்கு அதிலெல்லாம் பெரிய ஆர்வம் இருந்ததில்லை.
 
நாளை மீண்டும் படிக்கலாம்
 
– மதுரை மாயாண்டி