சென்னை:
தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெறுகிறது.
இதற்காக சட்டமன்றம் சிறப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது,.
எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு கோரி வரும் நிலையில், சபாநாயர் தனபால் இன்று எடுக்கப் போகும் முடிவே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய வாக்கெடுப்பு வழக்கமான முறையில், ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை உயர்த்தி, எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடைபெறுமா அல்லது ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்படுமா என்பது இன்று பேரவை கூட்டம் தொடங்கிய பிறகுதான் தெரியவரும்.
இன்று நடைபெறும் சட்டமன்றம் கூட்டம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதால், தமிழக மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்றம் சிறப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும்.
தீர்மானத்தின் மீது அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பேசுவார்கள்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் வாக்கெடுப்புக்கு விடுவார்.
தற்போது 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 117 எம்எல்ஏக்களின் வாக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்தால் மட்டுமே அவரது அமைச்சரவை நீடிக்க முடியும்.
சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் இருக்கைகள் 6 பகுதிகளாக உள்ளன. ஒவ்வொரு பகுதியாக வாக்கெடுப்பு நடைபெறும். இதில் ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், நடுநிலை வகிப்பவர்கள் என மூன்று பிரிவாக வாக்கெடுப்பு நடைபெறும்.
ஆதரிப்பவர்கள் எழுந்து நிற்கச் சொல்லி எண்ணப்படும். இப்படி 6 பகுதிகளிலும் உறுப்பினர்களிடம் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்த வாய்ப்புள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்கள் சூழ்நிலை கைதிகளாக கடந்த 12 நாட்களாக தனியார் சொகுசு விடுத்தியில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர் சுயமாக முடிவு எடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
சபாநாயகர் ரகசிய ஓட்டெடுப்பு நடத்தினால் மட்டுமே, அவர்களின் உண்மை நிலை தெரிய வரும். அதன் காரணமாகவே ஓபிஎஸ் அணியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரி வருகின்றனர்.
ஆனால், சட்டப்பேரவை தலைவர் தனபால் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதே தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரும்பான்மைக்கு 117 வாக்குகள் தேவை என்ற நிலையில், 116 வாக்குகள் பெற்று சமநிலை ஏற்பட்டால் சபாநாயகர் தனபால் வாக்களிக்கலாம்.
அப்போது சபாநாயகர் தனது வாக்கை அளித்து, நம்பிக்கை கோரும் அணியை வெற்றி பெற அல்லது தோல்வி அடையச் செய்ய வைக்க முடியும்.
தற்போது தமிழகத்தில் 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஜெயலலிதா மரணம் அடைந்துள்ளதால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது.
பேரவையில் அதிமுக 135, திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 என்று உறுப்பினர்கள் உள்ளனர்.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்எல்ஏக்க ளின் ஆதரவு தேவை. அவரது அணியில் தற்போது 124 எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால், நேற்று மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜும் நேற்று ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதன்மூலம் ஓபிஎஸ் அணிக்கு 11 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. மேலும் எடப்பாடி அணியில் இருந்து 13 எம்எல்ஏக்கள், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் திமுக , காங்கிரஸ் கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக தமிழக அரசியல் மேலும் பரபரப்பாக காணப்படுகிறது.