2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கு தமிழகத்தை உலுக்கிய வழக்காகும்.
பழனியை சேர்ந்த கவுசல்யா, உடன் படித்த கல்லூரி மாணவர் சங்கரை கலப்பு திருமணம் செய்ததால் கொல்லப்பட்டார்.


இந்த வழக்கில் திருப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மேலும் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
கவுசல்யாவின் தந்தை சின்னசாமி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு, 5 காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளது, நீதிமன்றம்.

ஒன்று:
சங்கரை திருமணம் செய்ததும், கவுசல்யா, தனது தந்தை சின்னசாமி மீது போலீசில் புகார் அளித்திருந்தார்.
‘தங்கள் பெற்றோர் தனக்கு எந்த தீங்கும் செய்யமாட்டார்கள் என கூறி, சமரசம் செய்து கொண்டு அந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டார், கவுசல்யா.

இரண்டு:
கொலை நடப்பதற்கு முன்பு சின்னசாமியும், கொலையாளிகளும் பலமுறை தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த தொடர்புக்கான சாட்சியங்கள் எதனையும் போலீசார் காட்டவில்லை. சின்னசாமிக்கும், கொலையாளிக்கும் இடையே நடந்த உரையாடலை அவர்கள் (போலீஸ்) பதிவு செய்திருக்கவில்லை.

மூன்று:
ஏ.டி.எம்.மில் சின்னசாமி பலமுறை பணம் எடுத்து, குற்றவாளிகளுக்கு அளித்தார் என போலீசார் கூறி இருந்தனர். ஆனால் ஏ.டி.எம்.ம்மில் பணம் எடுத்ததற்கான சி.சி.டி.வி. காட்சிகள் எதனையும் போலீஸ் சமர்ப்பிக்க வில்லை.

நான்கு:
விடுதியில் சின்னசாமி, கொலையாளிகளை தங்க வைத்தார் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,விடுதி ரிஜிஸ்தர் எதனையும் போலீஸ் பறிமுதல் செய்யவில்லை.அவர்கள் தங்கியதற்கான ரசீது எதனையும் காட்டவில்லை.

ஐந்து:
சிறுவர் பூங்காவில் கொலைச்சதி தீட்டப்பட்டதாகவும் அதற்கு சாட்சியம் உள்ளது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த சாட்சியான ஆட்டோ டிரைவர், கொலை சதி குறித்து அவர்கள் ஆலோசித்த இடத்தில் இருந்து 70 மீட்டர் தொலைவில் இருந்து தான் கேட்டதாக கூறியுள்ளார்.
70 மீட்டர் தூரத்தில் நடக்கும் ஆலோசனையை ஒருவர் கேட்பது சாத்தியம் இல்லை.

– பா.பாரதி