சென்னை: கோவில் நிதியில் மாணவர்கள் நலனுக்காக கல்லூரி கட்டுவது எப்படி தவறாகும்? என முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் சேகர்பாபு, அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

திமுக அரசு, அறநிலையத்துறை நிதியை எடுத்து கல்லூரிகள் கட்ட பயன்படுத்தி சதி செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுருந்தார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கிய ஈபிஎஸ், இரண்டாவது நாளான நேற்று கோவை வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டவுன் ஹால் பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர், 16 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ரோஜாப் பூ மாலையை அணிவித்தனர். வடவள்ளியில் பரப்புரை மேற்கொண்டபோது பேசிய ஈபிஎஸ், “அறநிலையத் துறையின் கைகளில் பணம் இருப்பதை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கோயில்களை கண்டாலே திமுகவினருக்கு பிடிப்பதில்லை. அதனால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுகின்றனர்,
மக்கள் உண்டியலில் பணத்தைப் போடுவது கோயிலை விரிவாக்கம் செய்வதற்குத்தான். நாங்கள் அனைத்துக் கல்லூரிகளையும் அரசு பணத்தில்தான் கட்டினோம். அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகளைக் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? அரசாங்கமே மாணவர்களுக்க கல்லூரிகளை கட்டலாமே? ஏன் கோவில் நிதி, அரசிடம் பணம் இல்லை , அதிமுக ஒரு சதிச் செயலாக பார்க்கிறது என்று பேசி இருந்தார்.
இதற்கு பதில் தெரிவித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்படி ஒரு துறை இருக்கிறது என்பதே மக்களுக்கு கழக ஆட்சியில்தான் பரிட்சயமாகி இருக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் தொடர்ச்சியாக தி.மு.க அரசு மீது அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோயில் பணத்தை எடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு பயன்படுத்துகிறார்கள் என கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி ,””வரலாறு தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. கோவில் நிதியில் பல கல்லூரிகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன. மாணவர்கள் நலனுக்காக கல்லூரி கட்டுவது எப்படி தவறாகும்?”தி.மு.க. ஆட்சியில் 46 கல்லூரிகளை தொடங்கியுள்ளோம். கல்வி பணியை தி.மு.க. ஆட்சி செம்மையாக நடத்தி கொண்டிருக்கிறது. கல்விக்கு சரஸ்வதி என்று குறிப்பிடுகிறோம். பசிப்பிணி போக்குதலும், கல்வி அளித்தலும் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகள் ஆகும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் தான் கல்லூரிகளால் அதிகம் பயன்பெறுகின்றனர்.
19 கோவில்களில் மருத்துவமனைகளையும் தொடங்கியுள்ளோம். கல்லூரிகளை தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் உள்ளது. காமராஜர் காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியிலும் அறநிலையத்துறை சார்பில் கல்விநிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் பழனி ஆண்டவர் கல்லூரியில் 2017-ம் ஆண்டு கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி விஷ விதைகளை பரப்பி வருகிறார் என்றார்.