சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட 12 கண்காணிப்பு குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 கண்காணிப்புக் குழுக்களுடன் ஏற்கனவே அமைக்கப்பட்டன. அந்த குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தல் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல்துறை தலைமை இயக்குனர் ஜெ.கே. திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், சமுதாயப் பரவல், அதை தடுக்க எடுக்கப்பட்ட வரும் முயற்சிகள், 34 மாவட்டங்களில் விரிவடைந்துள்ள கொரோனா தொற்று, சென்னை உள்பட பல மாவட்டங்களில் தீவிரமாக பரவி வருவதை தடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் தடையின்றிக் கிடைக்கவும், மருத்துவ உபகரணங்கள் தேவை, கொள்முதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும்போது தமிழகத்தின் சார்பில் எடுத்து வைக்க வேண்டிய கோரிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஊரடங்கை மேலும், கடுமையாக்கி பொதுமக்கள் வெளியில் வருவதைத் தடுப்பது, பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அப்போதுதான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று குழுவினர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
12 குழுக்கள் விவரம்:
1) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புக்குழு,
2) அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுக்கான ஒருங்கிணைப்புக்குழு,
3) மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான அத்தியாவசியப் பொருட்களின் வினியோகக் குழு,
4) ஊடக ஒருங்கிணைப்புக் குழு,
5) நோய் தொற்று கண்காணித்தல் மற்றும் தனியார் சுகாதாரப் பணிகள் ஒருங்கிணைப்புக்குழு,
6) போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழு,
7) நோய் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சரக்கு மேலாண்மை குழு, சுகாதார உட்கட்டமைப்புகள் மற்றும் நோய் கிருமிகளை நீக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் குழு,
8) தொண்டு நிறுவனங்கள் தன்னார்வலர்கள் ஆகியவற்றோடு இணைந்து நலிவுற்றோர், வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கான நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் குழு,
9) வெளி மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள தமிழகத் தொழிலாளர்கள் நலன்குழு
10) தமிழ்நாட்டிற்குள் உள்ள வெளிமாநில மாணவர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள தமிழக மாணவர்களின் நலன்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு,
11) முதியோர்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவையை எதிர்நோக்குவோர் ஆகியோரின் தேவைகளை கவனிக்கும் ஒருங்கிணைப்புக்குழு,
12) சுகாதார உள்கட்டமைப்புக்குழு