அக்டோபர் 2 ம் தேதி பிற்பகல் முதல் 4 ம் தேதி அதிகாலை வரை மூன்று நாட்களுக்கு க்ரே ஆர்க் என்ற பெயரில் பேஷன் டி வி நடத்தும் கலை மற்றும் இசை நிகழ்ச்சி ஒன்று கார்டீலியா என்ற சொகுசு கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டது.

படம் நன்றி இந்தியா டுடே

மும்பையில் அக்டோபர் 2 ம் தேதி காலை 11:30 மணிக்கு தொடங்கி அரபிக் கடலில் கோவா வரை சென்று திரும்பும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற 80,000 முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இரவு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வாட்டர்வேஸ் லீஸர் டூரிஸம் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கார்டீலியா சொகுசு கப்பல் இரண்டு வாரங்களுக்கு முன் செப்டம்பர் 18 ம் தேதி தான் தனது சேவையை துவங்கியது, இந்த அறிமுக விழாவில் பிரபல பாலிவுட் நடிகை கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

2000 பேர் வரை பயணம் செய்யக்கூடிய இந்த சொகுசுக் கப்பலில் பேஷன் டி வி நடத்திய க்ரே ஆர்க் நிகழ்ச்சிக்கு சுமார் 1000 பேருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பட்டது.

டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் இளைஞர்களே கலந்து கொண்டனர், அதிலும் டெல்லியைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பயணித்தனர்.

கொரோனா கட்டுப்பாட்டையும் மீறி மும்பை வந்து குவிந்த இந்த இளைஞர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் போதை மருந்து பயன்படுத்த இருப்பதாக 15 நாட்களுக்கு முன்பே போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தங்களுக்கு வந்த தகவலையடுத்து பயணிகள் போல நிகழ்ச்சிக்கான டிக்கெட் வாங்கிக் கொண்டு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும் கப்பலில் பயணம் செய்தனர்.

கப்பல் பயணம் துவங்கிய சிறிது நேரம் கழித்து பிற்பகல் சுமார் 2 மணியளவில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது கப்பலை சோதனை செய்ய இருப்பதாக கூறி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திய அதிகாரிகள், சந்தேகத்தின் பெயரில் 8 முதல் 10 பேரை துருவித் துருவி விசாரித்தனர்.

அதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானும் ஒருவர், தனது கையில் இருந்த போதைப் பொருளை ஷூவுக்குள் மறைக்க முற்பட்ட அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சண்டும் சோதனையில் சிக்கினார்.

ஆர்யன் கான்

மும்பைக்கு திரும்பி வந்த கப்பலில் இருந்து சோதனையில் சிக்கியவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்ற அதிகாரிகள், பல மணி நேர விசாரணைக்குப் பின், போதை மருந்து உட்கொண்ட வழக்கில் ஆர்யன் கான் மீதும், போதை மருந்து வைத்திருந்ததற்காக அர்பாஸ் மெர்ச்சண்ட் மற்றும் நடிகை முன்முன் தமிச்சா ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மேலும், சட்டை காலருக்குள் வைத்தும், பர்ஸ் மற்றும் உள்ளாடைகளில் வைத்தும் கப்பலுக்குள் போதை மருந்தை எடுத்துச் சென்றதாக நுபுர் சரிகா, இஸ்மீத் சிங், மோஹக் ஜஸ்வால், விக்ராந்த் சோக்கர் மற்றும் கோமித் சோப்ரா உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கப்பலுக்குள் போதை மருந்து கடத்திய இவர்களுக்கு போதை மருந்து எங்கிருந்து கிடைத்தது மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தொடர்பு குறித்தும் இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது, விசாரணைக்குப் பின் இவர்கள் மீதான வழக்கு விவரங்கள் குறித்து தெரியவரும்.

புதிதாக துவங்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் போதை மருந்து நடமாட்டம் இருந்த விவகாரம் மும்பை துறைமுக அதிகாரிகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், போதை மருந்து விவகாரத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கப்பல் ஒரு நிகழ்ச்சிக்காக மொத்தமாக வாடகைக்கு விடப்பட்டது என்றும் கார்டீலியா கப்பலுக்குச் சொந்தமான வாட்டர்வேஸ் லீஸர் டூரிஸம் நிறுவனம் கூறியுள்ளது.