“மக்கள் விரும்பியதை சாப்பிட தடை செய்யமுடியுமா ?” என்று குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தள்ளுவண்டிகளில் அசைவ உணவுகள் விற்பதற்கு தடை விதித்து அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த சாலையோர வியாபாரிகள், நகரில் தள்ளுவண்டிகள் மூலம் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளதோடு நிர்வாகத்தினர் அத்துமீறி நடந்து கொள்கின்றனர்.
கடைகளை அடித்து நொறுக்கி தள்ளுவண்டிகளை பறிமுதல் செய்யும் அதிகாரிகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மனு அளித்திருந்தனர்.
இந்த மனு மீது நீதிபதி பைரன் வைஷ்ணவ் விசாரணை நடத்தினார், நகராட்சி ஆணையரை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிபதி அவரிடம் “மக்கள் வெளியில் வந்தால் இந்த உணவு தான் சாப்பிட வேண்டும் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது என்று நீங்கள் எப்படி அவர்களின் விருப்பத்தை கட்டுப்படுத்த முடியும் ?” என்று கேள்வியெழுப்பினார்.
மேலும், “அதிகாரம் இருப்பதால் இன்று அசைவ உணவு சாப்பிட தடைபோடுபவர்கள் நாளை வெளியில் சாப்பிட கூடாது என்று கூற முடியுமா ? அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கரும்பு ஜூஸ் விற்க தடை விதிக்க முடியுமா ?” என்றும் கேட்டார்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அகமதாபாத் நகரில் தள்ளுவண்டி வியாபாரிகளின் மனு மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.