திருவள்ளூர்; விவசாய நிலங்களை எடுக்காமல் எப்படி சாலை அமைக்க முடியும்?  விவசாய நிலங்களை எடுக்காமல் சாலை வேண்டுமென்றால் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதான் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். அமைச்சரின் இந்த செயல் பொதுமக்களிடையே அதிர்சசியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ஜப்பான் நிதி உதவியுடன் சுமார் 1.79 ஏக்கர் பரப்பளவில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இங்கு தரைதளம் உள்ளிட்ட 3 தளங்கள் வடிவமைக்கப்பட்டு, இக்கூடுதல் மருத்துவமனைக் கட்டடம் பொதுப்பணி துறையால் கட்டப்பட்டு வருகிறது. இதனைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் நாசர் ஆகியோர், அதன் 2 தளங்கள் வரை சென்றுப் பார்வையிட்டதோடு நடைபெறும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. சுங்கச்சாவடிகள்,  நெடுஞ்சாலைகள் அமைப்பது, விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, கூறியதாவது,

சுங்கச்சாவடி தற்போது ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 45 சுங்கச்சாவடிகள்  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை தமிழக அரசு கட்டுப்பாட்டில் கொடுக்க வலியுறுத்தி வருகிறோம். மேலும், நெடுஞ்சாலைகளில்    அமைக்கப்பட்ட 45 சுங்கச்சாவடிகளில்,  உரிய விதிமுறைகள் பின்பற்றப் படுகிறதா என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர், தமிழ்நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இருப்பதாகவும், வருங்காலத்தில், அதை மாநில அரசே  பராமரித்து, அதில் வரும் தொகையை சாலை அமைத்த நிறுவனங்களுக்கு அளிக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

சாலை அமைக்கப்படு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,  விவசாய நிலங்களில் சாலைகள் அமைக்கப்படுவதாக கூறுகின்றனர். விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்படாத வகையில் சாலைகள் நேர்க்கோட்டில் அமைக்கப்படுகிறது. அதே வேளையில்,  விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் எடுக்க வேண்டும் என்றால், சாலைகளே இருக்காது. விவசாய நிலங்களை எடுக்காமல் எப்படி சாலை அமைக்க முடியும்? நாம் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைதான் உருவாகும்’ எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், ’பாடி முதல் திருநின்றவூர் வரையிலான சென்னை-திருப்பதி சாலை விரிவாக்கப் பணிகள் டிபிஆர் (TPR) தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கானப் பணிகள் தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கப்படும்.

இவ்வாறு கூறினார்.