கந்து வட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தின் மற்ற பல மாவட்டங்களில் இருந்து வரும் கந்து வட்டி கொடுமைகள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
கந்துவட்டிக்காரர்கள், தங்களிடம் சிக்கியவர்களை அடித்து உதைத்து துன்புறுத்துவது, வீட்டிற்குள் புகுந்து கும்பலாக மது அருந்துவது, கடன் வாங்கியவரின் மனைவி, குழந்தைகளை டார்ச்சர் செய்வது போன்ற கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.
இந்த வகை டார்ச்சர்களின் உச்சம்… கடன் வாங்கியவரின் குடும்பப் பெண்களிடம் வட்டிக்கு பதிலாக பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்வது.
கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இந்தக் கொடுமையையும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருள் துமிலன் இது குறித்து நம்மிடம் பேசும்போது, “தமிழகத்தில் பரவலாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றே வருகின்றன.
கொடுத்த பணத்துக்கு வட்டியை வசூலிக்க, கடன் வாங்கியவர் வீட்டுக்கு தினமும் அல்லது வாரம் ஒருமுறை செல்கிறார் கடன் கொடுத்தவர். அநேக நேரங்களில் குடும்பத்தலைவர் வீட்டில் இருக்க முடியாத நிலை இருக்கும். அவர் தனது வேலை நிமித்தம் வெளியில் சென்றிருப்பார்.
பல சமயங்களில் குறிப்பிட்ட தவணைகளில் பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஆகவே அடிக்கடி வட்டிக்காரர், கடன்காரரின் வீட்டுக்குச் செல்ல நேரிடுகிறது.
வட்டி கொடுக்க முடியாத நிலையில் கடன் கொடுத்தவரிடம் கெஞ்சிப் பேச வேண்டிய நிலை, சமாளிக்க வேண்டிய நிலை குடும்பத்தலைவிக்கு ஏற்படுகிறது.
இந்த நிலையில் இருவருக்கிடையே பாலியல் ரீதியாகவும் தொடர்பு ஏற்படும் சூழல் உருவாகி விடுகிறது” என்கிறார் அருள் துமிலன்.
“வட்டிக்கு பதிலாக செக்ஸ்” என்கிற அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துவருவதற்கு ஒரு உதாரணமாக, கடந்த 2014ம் ஆண்டில் பாலக்கோட்டில் நடந்த சம்பவத்தைச் சொல்லலாம்.
தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தை வெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். 42 வயதான இவர், வட்டிக்கு பணம் கொடுக் கும் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவரது செல் போன் திடீரென பழுதாகவே, ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுத்தார்.
செலபோனை சர்வீஸ் செய்த ஊழியர் மெமரி கார்டை பார்த்தார். அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் இருந்தன. அவற்றை செல்போன் சர்வீஸ் கடை ஊழியர் பதிவிறக்கம் செய்து கொண்டார்.
அதை நண்பர்களுக்கு சி.டி.யாகவும், பென்டிரைவ்விலும் காப்பி செய்து கொடுத்தார். இந்த வீடியோ பாலக்கோடு பகுதி முழுவதும் வேகமாக பரவியது.
இதுபற்றி தெரியவந்ததும் காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். அப்போது இந்த ஆபாச படங்கள் குறிப்பிட்ட செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் இருந்து பரவியது தெரியவந்தது. செல்போன கடை ஊழியரிடம் போலீசார் விசாரிக்க… சிவராஜ் செல்போனில் இருந்து அவை எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ஆபாசபடம் எடுத்தல், தொழில்நுட்ப மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன அதிபர் சிவராஜ் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தின.
பாலக்கோடு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதியில், வட்டிக்கு விடும் தொழிலைச் செய்து வந்திருக்கிறார் சிவராஜ். பணம் கேட்டு வரும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணம் அளிப்பார் சிவராஜ்.
வட்டி பணம் தர முடியாத பெண்களை, மிரட்டி தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வார். அதை தனது செல்போனிலும் வீடியோவாக எடுத்துக்கொள்வார்.
குப்பன் கொட்டாய் என்ற பகுதியில் சிவராஜிக்கு சொந்தமான 10 ஏக்கர் மாந்தோப்பு இருக் கிறது. இங்கு ஒரு பண்ணை வீடு இருக்கிறது. இங்குதான் தனது பாலியல் ராஜாங்கத்தை நடத்தியிருக்கிறார் சிவராஜ்.
இவரிம் பணம் கேட்டு அணுகி, பிறகு தங்களையே இவரிடம் இழந்தவர்கள் அனைவரும் குடும்பத்தலைவிகள்தான்.
6 மாத காலத்தில் 67 பெண்களை தனது வலையில் வீழ்த்தி பாலுறவு கொண்டதோடு, வீடியோவும் எடுத்திருக்கிறார் சிவராஜ்.
சிவராஜை கைது செய்த போலீசார், சேலம் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதுதொடர்பாக நான்கு பெண்கள் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி மீராசுமதி, பைனான்ஸ் அதிபர் சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனையும், ₹2.44 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதேபோல் செல்போன் கடைக்காரர் முன்னாவுக்கு 5 ஆண்டு சிறையும், ₹61 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
“பாலியல் ரீதியாக பெண்களை பயன்படுத்தியவர்கள், பயன்படுத்திக்கொண்டிருப்பவர்களில் சிக்கியவர் சிவராஜ் மட்டும்தான். ஆனால் இது போல ஆயிரமாயிரம் சிவராஜ்கள் தமிழகம் முழுதும் இருக்கிறார்கள் என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை.
இது போன்ற சம்வங்களைத் தடுப்பது அரசின் கையில்தான் இருக்கின்றது. தொழில் செய்ய பணம் தேவைப்போடுவோருக்கு எளிய முறையில் வங்கிக்கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதே போல பணமாகத் தராமல், தொழிலுக்குத் தேவையான பொருட்களாகவே தர வேண்டும். பணமாகக் கொடுத்தால், அதை வேறு செலவு செய்துவிட்டு தொழில் தொடங்க முடியாமல் திண்டுவோரையும் கண்டிருக்கிறேன்” என்றார் வழக்கறிஞர் அருள் துமிலன்.