வீடு என்பது வாழ்க்கையின் அடிப்படையான தேவை. மட்டுமல்ல, நம்மில் பலரது வாழ்க்கைக்கும் அடிப்படையாகவும் அஸ்திவாரமாகவும் வீடு இருக்கிறது. புதிதாக வீடு கட்டுபவர்கள் தங்களுடைய வீடு இப்படி தான் அமைக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள். ஆனால் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நபர் கனவை நிறைவேற்றக்கூடியவராக இருப்பாரா என்ற கவலை ஒரு புறம் இருக்க செய்யும். உங்கள் கனவு இல்லம் நனவாக சில முக்கிய அம்சங்களை புதிய வீடு கட்ட உள்ளவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அந்த வீட்டுக்கு அடிப்படை, அஸ்திவாரம் எனப்படும் அடித்தளமாகும். வீட்டின் அத்தனை பாரத்தையும் தாங்கிக்கொண்டிருப்பது அஸ்திவாரம்தான். ஆகவே வீடு கட்டும்போது முதலில் தொடங்கும் பணி அஸ்திவாரம் அமைப்பதுதான். அஸ்திவாரப் பணியின் தரத்தைப் பொறுத்து தான் வீட்டு உருவாக்கத்தின் தரமும் அமையும். பலமான அஸ்திவாரம் அமையும்போது பல ஆண்டுகளுக்கு வீடும் தரமாகவும் உறுதியாகவும் இருக்கும்.
அதனால்தான் அஸ்திவாரம் இடும்போது மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள்.
மனையை சதுரம் செய்யும் போது மூலை மட்டம் கொண்டு 90 டிகிரி இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். அஸ்திவாரம் அமைக்கும் போது மண் பிடிமானம் இல்லாத போது கன்சாலிடேசன் செய்து திமிசு கட்டையில் நன்றாக அடித்த பிறகு கான்கிரீட் போட வேண்டும். சாலை மட்டத்தில் இருந்து கட்டிடத்தின் பேஸ்மென்ட் தேவையான அளவு உயரமாக வைக்க வேண்டும். கட்டுமானத்தின் போது வாட்டர் லெவல் டியூப் கொத்தனார் பயன்படுத்துகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். அஸ்திவாரம், பெல்ட், லிண்டல், கான்கிரீட் என அனைத்து நிலைகளிலும் லெவல் டியூப் அவசியம் பயன்படுத்த வேண்டும்.
மதிப்புப் பொறியியல் (வேல்யூ எஞ்சினீயரிங்) என்று ஒன்று உண்டு. ஒவ்வொரு துறையிலும் எந்த வகையில் எல்லாம் செலவைக் குறைக்கலாம் என ஆய்ந்து ஆலோசனை கூறும் பிரிவு, அது. கட்டடவியலில் இதை ஒரு முக்கிய பாடமாக வைக்கவேண்டும்.
குறைந்த ஆழத்தில் அஸ்தி வாரம் போட்டால் போதும். தஞ்சை பெரிய கோயில் நான்கு அடி ஆழமான அடித்தளத்தில் தான் நிற்கிறது.
அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.
அஸ்திவாரம் இட முன்பு கருப்பட்டி, சுண்ணாம்பு போன்றவற்றைக் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அஸ்திவாரத்தைப் பொறுத்த அளவில் பெருமளவில் தரமான இரும்புக் கம்பியுடன் கான்கிரீட் கலந்தே அது அமைக்கப்படுகிறது. அஸ்திவாரத்தின் அடிப்படைக் கட்டுமானப் பொருள்கள் இரும்புக்கம்பி, கான்கிரீட் ஆகியவை. இவற்றை ஒன்றுகூட்டி வலுவேற்றப்பட்ட கான்கிரீட் உருவாக்கப்படுகிறது. ஆர்சிசி எனப்படும் இந்த வலுவேறிய கான்கிரீட் மீதுதான் நமது வீடு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.
வலுவேறிய கான்கிரீட்டில் துருப்பிடிக்கவோ, விரிசல் ஏற்படவோ வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. கான்கிரீட் கலவையில் இரும்புக் கம்பிகள் காரத் தன்மையுடன் இருப்பதால் அதில் தண்ணீர் பட்டால்கூட எஃகு துருப்பிடிக்காமல் தடுத்துவிடுகிறது. இதையும் மீறி எப்படித் துருவேறுகிறது என்பதுதான் புதிரான விஷயம். சிமெண்டில் குளோரைடு சம்பந்தப்பட்ட உப்புச் சத்து இருந்தால் அது எஃகைச் சுற்றி உருவாகும் பாதுகாப்பு உறையைச் சிதைத்துவிடும். அதேபோல் காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவும் பிற நச்சு வாயுக்களும் இந்தப் பாதுகாப்பு உறையை அழிப்பதில் தீவிரமாகச் செயல்படுகின்றன. இந்த கரியமில வாயு கான்கிரீட்டில் புகும்போது கார்பானிக் அமிலமாக மாறி பாதுகாப்பு உறையின் காரத் தன்மையை அரித்துவிடுகிறது.
இதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இதனை தவிர்க்காவிட்டால் கட்டிடமே ஆட்டம் கண்டுவிடும். எஃகு கம்பிகளைச் சுற்றி போதுமான அளவு கான்கிரீட் கலவையைப் போட்டு அதை மூட வேண்டும். அதில் சிக்கனம் காட்டக் கூடாது. அதே போல் அஸ்திவாரத்துக்குப் பயன்படுத்தும் நீரும் நல்ல தண்ணீராக இருக்க வேண்டும். உப்புத் தன்மை உள்ள நீர் என்றால் கம்பிகள் துருப்பிடிக்கக் காரணமாக அமைந்துவிடும். அதே போல் கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்ட பின்னர், கட்டிடத்திலிருந்து வழியும் கழிவு நீர் அஸ்திவாரத்துக்குள் புகுந்துவிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம் .
குளிர் பிரதேசங்களில் , தண்ணீர் உறையும் சூழல் நிலவுவதால் அஸ்திவாரம் ஆழமாகப் போடுவது அவசியமாகின்றது. இல்லையேல், உறைந்த தண்ணீர் கட்டிடத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி சேதாரத்தை ஏற்படுத்தும். மேலும், இந்தியா போன்ற நாடுகளில், மண்ணின் தன்மை பொருத்தும், விலையைப் பொருத்தும் அஸ்திவாரம் கட்டப்படவேண்டும்.