தோழியுடன் தகராறில் தற்கொலை.. சிக்கலில் மாட்டிய ஹோட்டல் ஓனர்..
திருவான்மியூரைச்சேர்ந்த 26 வயது சரவணன் தனியார் அலுவலகத்தில் டேடா என்ட்ரி ஆபரேட்டராக பணிபுரிகிறார். இவர் ஃபேசன் டிசைனில் மாணவியான தனது 19 வயது பெண் நண்பருடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளைப் பேசி சரி செய்யும் பொருட்டு அருகேயுள்ள ஒரு ஓட்டலில் ரூம் எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், மது போதையிலிருந்த சரவணன் அப்பெண்ணின் கண் எதிரிலேயே முதலாவது மாடியிலிருந்து குதித்து விட்டார்.
அதிர்ச்சி அடைந்த அந்தப்பெண் அவரை அருகேயுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்பு அங்கிருந்து அவர் அடையாறிருள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். சனிக்கிழமை நடந்த இந்த தற்கொலை சம்பவம் குறித்து சரவணனின் மாமா ஜான்சன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நேற்று வழக்குப் பதிவு செய்து உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
தற்போது ஊரடங்கு காலத்தில் அரசின் விதிமுறைகளுக்கு எதிராக இவர்களுக்குத் தங்க அறை ஒதுக்கீடு செய்த ஓட்டல் ஓனர் ஆட்னன் அலி என்பவர் மீது பலவேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டல் ஓனர் சரவணனின் நண்பர் என்பதால் தான் எளிதாக அறை கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
– லட்சுமி பிரியா