சென்னை: ஒசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நாளை கலந்துகொள்ளவும், நாளை மறுநாள், கிருஷ்ணகிரியில் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், இரண்டு நாள் பயணமாக நாளை காலை கிருஷ்ணகிரி புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக நாளை (வியாழக்கிழமை) கிருஷ்ணகரி மாவட்டத்திற்கு செல்கிறார். காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓசூர் தனேஜா விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.

இதையடுத்து அங்கிருந்து காரில், ஓசூரில் தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் நட்சத்திர விடுதியை சென்றடைகிறார். அங்கு காலை 11.30 மணிக்கு நடைபெற கூடிய தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர்களுடன் உரையாடுவதுடன், சிறப்புரை ஆற்றுகிறார்.
பின்னர் அங்கிருந்து 12.50 மணிக்கு கார் மூலம், எல்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு செல்கிறார். அங்கு அமைய உள்ள நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் மதிய உணவை எடுத்துக்கொள்கிறர் சிறிது ஓய்வுக்கு பிறகு மீண்டும், மாலை 4 மணிக்கு ஓசூரில் இருந்து புறப்படுகிறார். மாலை 4.30 மணி அளவில் சூளகிரி பஸ் நிலையத்தை அடைகிறார்.
அங்கு பஸ் நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மாலை 4.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்தை வந்தடைகிறார். அங்கு 5 மணிக்கு புதிய தொழிற்சாலை தொடங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 6 மணிக்கு கிருஷ்ணகிரியை வந்தடைகிறார்.
அங்கு சுங்கச்சாவடி அருகில் கட்சியினர் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து ரோடு ஷோவில் பங்கேற்கும் அவர் இரவு கிருஷ்ணகிரியில் தங்குகிறார்.
நாளை மறுதினம் 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கிறார். அங்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் அவர், விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வை யிடுகிறார்.
தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து விழா மேடைக்கு வரும் முதலமைச்சர் கல்லில் உறைந்த வரலாறு கிருஷ்ணகிரியின் தொன்மையும் வரலாறும் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட புத்தகத்தை வெளியிடுகிறார். பின்னர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.
அத்துடன், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்த குறும்படத்தை திரையிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பின்னர் கார் மூலமாக ஓசூர் புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் முதலமைச்சர் சென்னை செல்கிறார்.