சென்னை,
மருத்துவமனையை முற்றுகையிடுவது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி விடுத்துள்ளார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் நடிகர் சிவாஜி பேரவையின் சார்பில் நடந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் கலந்துக் கொண்டு பேசிய முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் , கட்சிக்காக எவ்வளவுதான் உழைத்தாலும் சில பின்னடைவுகள் வரத்தான் செய்கின்றது. மக்களுக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை என பேசினார்.
பணம் வாங்கிக் கொண்டு தற்போது கவுன்சிலர் சீட்டு கொடுக்கப்படுகிறது என அரசியல் கட்சிகளை குற்றம் சாட்டினார்.
தலைவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போவது இயற்கையானது. ஆனால் மருத்துவமனையை முற்றுகையிடுவதும், பூசணிக்காய் உடைப்பதும் எந்தவகையில் நியாயம், இது பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் இடைஞ்சலாக இருக்காதா? என கேள்வி எழுப்பினார்.
சாதித்த பெண்மணி , தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்பவர். அவர் பூரண குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்த இளங்கோவன், அவர் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் அரசு இது போன்ற சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.