இறந்த மகனைக் கட்டி அழ முடியாத மருத்துவமனை ஊழியர்..
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான வார்டில் ஊழியராக பணியாற்றி வந்தவர், மனீஷ் குமார் தியாகி.
14 நாட்கள் கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவமனை ஊழியர்கள், 14 நாட்கள் , தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால், அவரும், அங்குள்ள ஓட்டலில் தங்கி இருந்தார்.
அந்த நேரத்தில் மனீஷின் 3 வயது மகனுக்கு உடல்நிலை சரி இல்லை என போன் வர, இவரால் போக முடியவில்லை.
மனீஷின் மனைவி, பக்கத்து வீட்டார் துணையோடு மகனை அங்குள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இரக்கமே இல்லாமல் 2 தனியார் மருத்துவமனைகள், சிறுவனை அனுமதிக்க மறுத்து விட்டன.
கடைசியில், வெகுநேரம் கழித்து அங்குள்ள மன்னர் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அந்த சிறுவன் உயிர் இழந்தான்.
மகன் சடலத்தைப் பார்க்க ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார் ,மனீஷ். தூரத்தில் இருந்தே மகன் சடலத்தைப் பார்க்க முடிந்தது.
இறந்த மகனைக் கட்டி அழ முடியவில்லையே எனக் கதறிய மனீஷ் மேலும் தொடர்ந்தார்.
‘’ எத்தனை நோயாளிகளுக்கு நான் உதவி இருப்பேன்? ஒரு மருத்துவ ஊழியனின் மகனைத் தனியார் மருத்துவமனைகள் சேர்க்க மறுத்தது கொடுமை. அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்திருந்தால், என் மகன் பிழைத்திருப்பான்’’ என்று புலம்புகிறார், மனீஷ்.
– ஏழுமலை வெங்கடேசன்