சிறப்புக்கட்டுரை:  ஜீவசகாப்தன்             

ந்துவட்டி கொடுமை என்பது தமிழகம் முழுவதும் சாமான்ய மக்களைப் பாதிக்கின்ற  நடைமுறையாக இருக்கிறது. பெரும்பாலும்” முதல்” இல்லாமல் தொழில் செய்யும் வியாபரிகள்தான் இந்த கந்து வட்டி கொடுமைக்குள் சிக்கிக் கொள்கின்றனர். காய்கறி சந்தை,மீன் சந்தை ,பூ சந்தை போன்ற இடங்களில் இந்த தொழில் நடைபெறுகிறது.

ஆடம்பரமாக திருமணம் செய்யவேண்டும்,அதிக மொய் வைக்க வேண்டும் என்பது போன்ற சடங்குகள் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்ட சமூகங்கள் இந்த கந்து வட்டி தொழிலை செய்கின்றன. தென் தமிழகத்தில்,இந்த கந்து வட்டி கொடுமை அதிகமாக இருக்கிறது. மீட்டர் வட்டி,ரன் வட்டி கேள்விப்பட்டிருப்பீர்கள். கடப்பாரை வட்டி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

கடப்பாரை வட்டி.

வட்டி கேட்டு வந்து விட்டால்,பணம் அல்லது பொருள் எதையாவது எடுத்துவிட்டுப் போகாமல் விட மாட்டார் கள். 5 வருடங்களுக்கு முன் “அன்னக் கொடியும் கொடிவீரனும்” என்கிற பாரதிராசாஇயக்கிய திரைப்படம் வெளிவந்தது. அந்த படத்தில், வட்டிக் கொடுமையைப் பற்றி மிக விரிவாக காட்டப்பட்டிருக்கும். அதில் ஒரு காட்சியில்,வட்டி பணம் கேட்டு வீட்டிற்கு வருபவர்கள் பணத்திற்கு பதிலாக கடனாளியின் மனைவியை தூக்கிக் கொண்டு போய்விடுவர். எப்ப பணம் திரும்ப வருகிறதோ ?அப்போது மனைவி திரும்பி ஓப்படைக் கப்படுவார். இந்த கொடூர நடைமுறைக்குப் பெயர்தான் கடப்பாரை வட்டி.

இது போன்ற கொடூரமான நடைமுறைகளை ஓழிப்பதற்காகத்தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால்  கொண்டு வரப்பட்ட சட்டமே “அதீத வட்டி வசூல் தடுப்புச் சட்டம் 2003.”

மிரட்டப்பட்ட அஜீத்தும், கொல்லப்பட்ட தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரனும்

கந்து வட்டி தடுப்புச்சட்டம் கொண்டுவரப்படுவதற்கான களச்சூழலை நாம் பார்க்கவேண்டும். இந்த சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னால்,கந்து வட்டிக் கொடுமை செய்திகள் அன்றாடம் வந்து கொண்டிருந்தது. கூலித் தொழிலாளர்களின் தற்கொலை அதிகரித்தது. பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் அவலம் ஏற்பட்டது.

கந்து வட்டி எப்பேர்பட்ட நபரையும் மிரட்டும் ,தேவைப்பட்டால் கொல்லும் என்கிற சூழல் இருந்தது.

நடிகர் அஜீத்குமார் படம் ஒன்றில்  ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த படம் பாதியிலியே நின்றுவிட்டது.அதில் ஏற்பட்ட பணத்தகராறில் மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் அஜீத்தின் முகத்தை அமிலத்தால் சிதைத்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். தென்தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இயக்குனர்தான் அஜீத்தை மிரட்டியிருக்கிறார் என்று அப்போது சொல்லப்பட்டது. பணம் போனால் போகிறது என்று அஜீத் அவர்களின் பேச்சிற்கு கட்டுப்பட்டு, அவர்களிடமிருந்து விடுபட்டு வந்ததே பெரிய விசயமாக பேசப்பட்டது.தமிழகம் முழுவதும் இது பேசுபொருளாக இருந்ததா? என்பது தெரியவில்லை.ஆனால்,மதுரைவாசிகள் அனைவருக்கும்  இந்த சம்பவம் நன்கு தெரியும்.

இயக்குனர் மணிரத்னம் அவர்களின் அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரனின் தற்கொலை.

.ரஜினி நடித்த தளபதியிலிருந்து விஜயகாந்தின் சொக்கத் தங்கம் வரை பல திரைப்படங்களை தயாரித்தவர் ஜி.வெங்கடேஸ்வரன். கந்து வட்டி கொடுமையால் மதுரையைச் சேர்ந்த நபர் ஓருவர் மிரட்டி தற்கொலை செய்து கொண்டார்.

சமான்யர் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரையும் காவு வாங்கியிருக்கிறது கந்து வட்டி. இவரின் தற்கொலைக்குப் பிறகு,கந்துவட்டி தற்கொலை செய்திகள் சர்வ சாதரணமாக வெளிவரத் தொடங்கின. இனிமேலும் இந்த கொடுமைகள் நீடிக்க கூடாது என்று முடிவெடுத்த ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்டச் சட்டம்தான் அதீத வட்டி வசூல் தடுப்புச் சட்டம் 2013.  இந்த சட்டத்தின்படி ,கந்து வட்டி வசூலிப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனையும்,30000 ரூபாய் பணமும் அபாரதமாக விதிக்கப்படுகிறது.

ஜெயலலிதா ஆட்சியில் எத்தனையோ மக்கள் நல திட்டங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அந்த திட்டங்கள் அனைத்தும் வாக்கு அரசியலில் அவருக்கு சிறிதளவேனும் பயன்பட்டிருக்கும். ஆனால் ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்ட கந்து வட்டி ஒழிப்புச் சட்டம் அவருக்கு வாக்கு அரசியலில்  பயன் அளித்ததா? என்பதை திறனாய்வு செய்வோம்.

வாக்கு அரசியல் கந்து வட்டி தடுப்புச் சட்டம்

ஆட்சியாளர்கள் கொண்டு வரும் சட்டங்களில் கவர்ச்சிகரமான திட்டங்கள் வாக்கு அரசியலில் அவர்களுக்கு பயன்தரும். பல நேரங்களில் வாக்கு அரசியலை மய்யப்படுத்தியே கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படும்.ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை இருவிதமாக பிரிக்கலாம்

1 .மக்களின் நலன்களை மய்யப்படுத்தி செயல்படுவது

2.மக்களின் நம்பிக்கைகளை பெறுவதற்காக செயல்படுவது

மேற்கண்ட இரு நடைமுறைகளில் இரண்டாவது நடைமுறையைத்தான் எல்லா அரசியல்வாதிகளும் மேற்கொள்கிறார்கள். ஏனென்றால்,மக்கள் நலன் என்பது பல நேரங்களில் மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிராகத் தான் அமையும். இதற்கு உதாரணமாக அறிஞர் அண்ணாவின் அரசியல் நடைமுறையை  எடுத்துக் கொள்ளலாம்.

1936 ம் ஆண்டு நடைபெற்ற நகர் மன்ற தேர்தலில் அண்ணா போட்டியிருகிறார். அப்போது பரப்புரையின் போது,”சேரி மக்களின் குடிசைப் பகுதிகளில் விளக்கேற்ற இந்த அரசால் முடியவில்லை.ஆனால் கோவில்களில் விளக்கு எரிகிறது “என்று பேசினார்.உடனே,எதிர்தரப்பினர் பார்த்தீர்களா? கோவில்களில் விளக்கு எதற்கு? என்று அண்ணா கேட்கிறார். இவரைப் போன்ற நாத்திகர்கள் வென்று வந்தால்,கோவில்களில் இருக்கும் விளக்கை அணைத்து விடுவார்கள் என்று எதிர் பரப்புரை மேற்கொண்டனர். அந்த தேர்தலில் எதிர்தரப்பினரின் பரப்புரைதான் எடுபட்டது. அண்ணா தோற்று விட்டார்.

மக்கள் நலனை முக்கியத்துவப்படுத்தி, மக்களின் நம்பிக்கைக்கு எதிராக பேசிய அண்ணா தோற்றுவிட்டார்.

அதே அண்ணா திமுகவை ஆரம்பித்து தேர்தலை சந்திக்கும்பொழுது, “ஓன்றே குலம் ஓருவனே தேவன்,மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று பேச ஆரம்பித்தார். அதாவது தனது நாத்திக பரப்புரையை கைவிட்டு விட்டார். அதன் விளைவாக,வெகு மக்களின் நம்பிக்கையைப் பெற்று, கட்சி ஆரம்பித்த 18 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்கு உயர்ந்தார். ஆட்சிக்கு வந்தபிறகு,வாக்கு அரசியலைப் பற்றி கவலைப்படாமல்,சுயமரியாதை திருமணச் சட்டம் போன்ற மிகப்பெரிய சீர்திருத்த சட்டத்தை கொண்டுவந்தார் என்பதெல்லாம் வேறு விசயம்.

பொதுவாக அரசியல்வாதிகள் வாக்கு அரசியலை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும்,சட்டத்தையும் கொண்டு வர மிகவும் யோசிப்பார்கள். அந்த வகையில் பார்த்தால் தனக்கான வாக்கு அரசியலைப் பற்றிக் கவலைப்படாமல்,துணிச்சலாக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம்தான் கந்து வட்டி தடுப்புச் சட்டம்.

கந்துவட்டி தடுப்புச் சட்டத்தால் ஜெயலலிதா இழந்த தொகுதிகள்

அதிமுக சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் இடைத் தேர்தல். அந்த முதல் தேர்தலிலிருந்து தற்போது வரை அதிமுகவிற்கு சாதகமாகவே தென்மாவட்டங்கள் இருக்கின்றன. குறிப்பாக,திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, ,ராதாபுரம்,பாளையங்கோட்டை போன்ற தொகுதிகள் நீங்கலாக பிற தொகுதிகள் அனைத்தும் அதிமுகவின் வலுவான வாக்கு வங்கியுள்ள தொகுதிகள்.

அந்த வலுவான வாக்கு வங்கியுள்ள தொகுதிகள் அனைத்திலும் 2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. காரணம் என்ன?

2003 ம் ஆண்டு ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட கந்து வட்டி தடுப்புச் சட்டம்தான் அந்த தொகுதிகளில்அதிமுக தோற்பதற்கு  முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

உதாரணமாக, சில தொகுதிகளைப் பார்க்கலாம். அம்பாசமுத்திரம்,ஆலங்குளம்,சிறிவைகுண்டம், போன்ற தொகுதிகள் எல்லாம் அசைக்க முடியாத அதிமுக தொகுதிகள்.

89 ம் ஆண்டு அதிமுக இரண்டாக பிரிந்து,இரட்டை இலை சின்னத்தை பறிகொடுத்த பிறகு, தென்மாவட்டங்களில் பல இடங்களில் திமுக கைப்பற்றியது. ஆனால்,அப்போது கூட நெல்லை மாவட்டத்தின் மேற்கண்ட தொகுதிகளில்(அம்பாசமுத்திரம்,ஆலங்குளம்,சிறிவைகுண்டம்) திமுக வெற்றி பெறமுடியவில்லை. தனித்து நின்ற காங்கிரசு கட்சிதான் வெற்றி பெற முடிந்தது. அந்த அளவிற்கு திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் தொகுதிகளில் கூட  2006 ல் திமுக வெற்றி பெற்றது. காரணம் என்ன? ஜெயலலிதா கொண்டு வந்த கந்து வட்டி தடுப்புச் சட்டம்தான்.

ஏனென்றால்,நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டித் தொழிலை செய்பவர்களில் பெரும்பாலானோர் கொண்டைய கோட்ட மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவிற்கு சார்பான சமூகம். கந்து வட்டி தடுப்புச் சட்டத்தினால் தாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக அந்த சமூக மக்கள் உணர்ந்தார்கள். அதன் விளைவாக, நெல்லை மாவட்டத்தில் 2006 ம் ஆண்டு தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஜெயலலிதா சில நேரங்களில் வாக்கு அரசியலைப் பற்றி கவலைப்படாமல் நடவடிக்கை எடுக்ககூடியவர் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் கந்து வட்டி தடுப்புச் சட்டம். வாக்கு அரசியலில் அரிதிலும் அரிதாகத்தான் வாக்கு அரசியலைத் தாண்டி  மக்கள் நலனிற்காக சிந்திப்பார்கள். அப்படியொரு அரிதான சம்பவம்தான் கந்து வட்டி தடுப்புச் சட்டம்.

தனக்கான வாக்குகளை இழந்து மக்களை காக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் கொண்டு வந்த இந்த சட்டம் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைதான் நெல்லை தீக்குளிப்பு சம்பவம் நம்ககு உணர்த்துகிறது.  ஜெயலலிதாவின் ஆன்மாதான் தங்களை வழிநடத்துகிறது என்று கூறிக் கொள்ளும் இந்த அரசு கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை நேர்மையாக, எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். அதுதான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இந்த அரசு செலுத்தும் உண்மையான் அஞ்சலியாக இருக்கும்.