சென்னையிலுள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் நடிகர் சத்யராஜ்க்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 7-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் இந்திய அரசின் விண்வெளித்துறைச் செயலரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான ஏ.எஸ்.கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் சத்யராஜ்க்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர், துணை வேந்தர், தலைவர், துணைத் தலைவர் உள்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டமளிப்பு விழாவில் 1872 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
சத்யராஜ் கோவை மாவட்டத்தில் பிறந்த ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையா. இவர் வில்லன் நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையைத் துவங்கி, பின் கதாநாயகன் நடிகராக மாறி நடித்து வருகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சிபிராஜ் இவரது மகன். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர்.
சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காக பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.