ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுலின் நேர்மையை அம்பையர் பாராட்டியது வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 622 ரன்கள் குவித்து போட்டியை டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவடைந்தது.
இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது ரவீந்திர ஜடேஜா 15வது ஓவரை வீசினாா். இந்த ஓவரின் முதல் பந்தை ஆஸ்திரேலிய வீரர் ஹாரிஸ் எதிா்கொண்டாா். இந்த பந்து ஹாரிஸின் பேட்டில் படாமல் தவறுதலாக கே.எல்.ராகுல் நின்றிருந்தப்பக்கம் சென்றது. ராகுலும் பந்தை பிடிக்க முயன்று டைவ் அடித்தாா்.
ஆனால், அதிா்ஷ்டவசமாக ஹாரிஸ் அடித்த பந்து ராகுல் கையில் சிக்குவதற்கு முன்பாக தரையில் விழுந்தது. பந்து தரையில் விழுந்த அடுத்த நொடியில் அதனை ராகுல் கைப்பற்றினாா். தொலைவில் இருந்து பாா்த்த இந்திய ரசிகா்கள் ஹாரிஸின் விக்கெட்டை கைப்பற்றி விட்டதாக எண்ணி கொண்டாடத் தொடங்கினா்.
எனினும் ஒரு நொடி கூட தாமதிக்காத ராகுல் பந்தை கேட்ச் பிடிக்கவில்லை, இது விக்கெட் கிடையாது என்று சைகை செய்தாா். இதனால் இந்திய வீரா்கள் மீண்டும் விளையாடத் தொடங்கினா். கே.எல். ராகுலின் இந்த நோ்மையைப் பாா்த்த அம்பயர் இயன் குட் கை தட்டி வரவேற்றாா். தற்போது இந்த வீடியோ இந்திய ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.