சென்னை: தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 17ந்தேதி நேரம் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தின்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில், தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், தமிழக எம்.பி.க்களை சந்திக்க அமித்ஷா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது சர்ச்சையானது. மத்திய அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அமித்ஷாவை சந்திக்க 7 பேர் கொண்டு தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவுக்கு ஜனவரி 17ந்தேதி நேரம் ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் தமிழக எம்.பி.க்கள் குழு, நீட் விலக்கு தொடர்பாக அமித்ஷாவிடம் வலியுறுத்த உள்ளனர்.