சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ந்தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது வருகை அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், #Gobackamithsha என திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி எழுதிய சுவர் விளம்பரமும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், உள்துறை அமித்ஷா தமிழக திட்டங்கள் தொடர்பான விழாவில் பங்கேற்கவே சென்னை வருகிறார் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவள்ளூா் மாவட்டம் தோ்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பில் புதிய நீா்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மக்களின் பயன்பாட்டுக்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா திறந்து வைக்கிறார். மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் சாா்பில் ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் இரண்டாம் கட்டத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கோயம்புத்தூா் மாவட்டம் அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பில் உயா்நிலை சாலைத் திட்டம், கரூா் மாவட்டம் நஞ்சை புகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூ.309 கோடியில் சென்னை வா்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சாா்பில் வல்லூரில் ரூ.900 கோடியில் பெட்ரோலிய முனையம், அமுல்லைவாயலில் ரூ.1,400 கோடியில் உயவு எண்ணெய் ஆலை, காமராஜா் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்கு தளம் ஆகிய திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அடிக்கல் நாட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான விழா சென்னை கலைவாணா் அரங்கத்தில் வரும் சனிக்கிழமை (நவ.21) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. விழாவுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகிக்கிறாா். இதில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சிறப்புரையாற்றுகிறாா். தொழில் துறை அமைச்சா் எம்.சி. சம்பத் முன்னிலை வகிக்கிறாா். தலைமைச் செயலாளா் க.சண்முகம் வரவேற்கிறாா். தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம் நன்றி தெரிவிக்கிறாா் என்று கூறப்பட்டு உள்ளது.
ஆனால், இன்று (18ந்தேதி) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசு நிகழ்ச்சிகளில் அமித்ஷா பங்கேற்கவில்லை. அப்படி அவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக எந்த நிகழ்ச்சி நிரலும் இதுவரை வரவில்லை’’என்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
செய்தியார்கள் அவரிடம், ‘’அமித்ஷா எதற்காக தமிழகம் வருகிறார்?’’ என்ற கேள்விக்கு, ’’தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேசிய தலைவர்கள் தங்களது கட்சியை வளர்ப்பதற்காக மாநிலங்களுக்கு வருவதுண்டு. அப்படித்தான் அமித்ஷா வருகிறார். அவர் வரட்டும். யார் வேண்டுமானாலும் தமிழகத்திற்கு வரலாம். அவர் வருகைக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’’ என்றவரிடம்,
அமித்ஷாவின் வருகையினால் அதிமுகவுக்கு பயம் ஏற்பட்டிருக்கிறதா? என்ற கேள்விக்கு, ‘’இது நீங்கள் எதிர்கட்சியை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி’’ என்றார்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும் நிலையில், சமீபகாலமாக இரு கட்சிகளுக்கும் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. மேலும், தமிழக பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சூழலில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தலைமையில் பல கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்து வரும் நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கும், திமுகவுக்கும்தான் நேரடி போட்டி என்று கூறி வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில்தான் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணிகளை வலுப்படுத்துவதிலும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
திமுக தலைமையில் தற்போதைய நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள், தலித்துகளின் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், சிறுபான்மையினர் கட்சிகள் என வலிமையான கூட்டணி உள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக இருந்து வரும் நிலையில், சமீபகாலகமாக பாஜக, தேமுதிக நடவடிக்கைகள், அதிமுகவுக்கு எதிரான மன நிலையில் உள்ளது. இதனால், அதிமுக தலைமையில், பாஜக, தேமுதிக இணையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியையும் பாஜக மேற்கொண்டு வருகிறது.
இதுமட்டுமின்றி, திராவிட கட்சிகளின் வாக்குகளை பிரிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் மற்றும் ஜாதிய ரீதியிலான அமைப்புகளும் தங்கள் பங்குக்கு கொடி உயர்த்திக்கொண்டுள்ளன.
இந்த சூழலில்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரும் தகவல் தமிழக அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த பீகார் சட்டமன்ற தேர்தலில், பாஜக பெரும் வெற்றியை பெற்ற நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் தமிழகத்துக்கும் அமித்ஷா வருகை தர இருப்பது திராவிட கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல்ர் எடப்பாடிக்கு அமித்ஷா நெருக்கடி கொடுக்கக்கூடும் என்றும், அதிமுக தலைமைக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை சுட்டிக்காட்டியும், சசிகலா விடுதலை போன்ற காரணங்களைக்கொண்டு அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டுக்கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, அமித்ஷாவின் சென்னை வருகையின்போது, ரஜினியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான முயற்சியை, ஆடிட்டர் குருமூர்த்தி மேற்கொண்டு வருவதாக வும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
எப்படி இருந்தாலும், அமித்ஷாவின் தமிழக வருகை அரசியல் நோக்கர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.