கொல்கத்தா :

 

கொரோனா வைரசுக்கான சிறந்த தடுப்பு மருந்து இந்த தீர்த்தம் என்று கூறி கொல்கத்தா ஊர்காவல் படையை சேர்ந்த காவலர் ஒருவருக்கு மாட்டு சிறுநீர் கொடுத்த பா.ஜ.க. தலைவர் நேற்று கொல்கத்தா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வடக்கு கொல்கத்தாவின் ஜோராசங்கோ பகுதியைச் சேர்ந்த பாஜக தலைவர் நாராயண் சாட்டர்ஜி திங்களன்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார், அப்போது அவர் அங்கிருந்தவர்களுக்கு மாட்டு சிறுநீர் விநியோகித்தார். செய்தித்தாள்களில் வந்த செய்தியின் படி, கோமியம் குடிப்பதால் கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் என்று அவர் மக்களிடம் கூறினார்.

இதனை அந்தப்பகுதியில் சீருடையில் பணிபுரிந்துகொண்டிருந்த ஊர்காவல் படையை சேர்ந்த பிந்து பிரமானிக் என்பவருக்கும் வழங்கினார்.

இந்நிலையில், பிந்து பிரமானிக், செவ்வாய்கிழமை காலை, நாராயண் சாட்டர்ஜி மீது ஜோரபகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தீர்த்தம் என்று கூறி நாராயண் சாட்டர்ஜி தனக்கு மாட்டு சிறுநீர் கொடுத்ததாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகாரளித்தார்.

இந்த புகாரை ஏற்று விசாரித்த காவல் துறை அதிகாரிகள், நாராயண் சாட்டர்ஜி மீது சட்டப்பிரிவு 269 (சட்டவிரோதமாக அல்லது அலட்சியமாக உயிருக்கு ஆபத்தான எந்தவொரு நோயையும் பரப்புவது.), 278 (உடலுக்கு தீங்கு விளைவிப்பது) மற்றும் 114 (குற்றம் நிகழும்போது உடனிருந்தது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் மேற்கு வங்க, பாஜக மாநில பொதுச் செயலாளர் சயந்தன் பாசுவை கேட்டபோது, இந்த நிகழ்ச்சிக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.

இது போன்று மாட்டு மூத்திரத்தை கொரோனாவுக்கு தீர்வுதரும் ‘கோ மூத்திரம் குடிக்கும் நிகழ்ச்சி’ என்ற பெயரில், தொற்று நோய் உலகம் முழுக்க தீவிரமாக பரவிவரும் நேரத்தில், பல்வேறு இடங்களில் நடத்தி வருவது கேள்விக்குறியாக உள்ளது.