சென்னை: முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. சென்னையில் 19.08.2021 நிலவரப்படி, மொத்தம் 35,68,932 பேருக்கும், 19.08.2021 அன்று 13,954 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,   80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில்,  சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.
தடுப்பூசி செலுத்த 044-2538 4520, 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.