டெல்லியில் சி.ஜே.பி. (Cockroach Janta Party) கட்சி நடத்திய ‘சன்சத் சலோ’ பேரணியின் போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் அளவுக்கு மீறிய வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், “அமைதியான மற்றும் சட்டப்பூர்வமான போராட்டம் நடத்தும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தால் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. போராட்டம் அமைதியாக நடைபெறும்போது, அது போராட்டம் என்பதற்காக மட்டும் தடியடி நடத்த முடியாது” என்று தெரிவித்தனர்.

அதே நேரத்தில், நாடு முழுவதும் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு ஒரே மாதிரியான வழிமுறைகள் (Protocol) உருவாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதுகுறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், “அமைதியாக போராட்டம் நடத்த விரும்புபவர்களுக்கு அதற்கான இடமும், நடைமுறைகளும் இருக்க வேண்டும். அதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது. ஆனால் சமூக விரோதிகள் யாரேனும் பிரச்சினை செய்தால், அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.
ஜூலை 20-ல் என்ன நடந்தது?
ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற ‘சன்சத் சலோ’ பேரணி வன்முறையாக மாறியதாகக் கூறி, கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.
மறுபுறம், சிலர் போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டதுடன், பொது சொத்துகளையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த மோதலில் 118 போலீசாரும், 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், சம்பவம் தொடர்பான சிசிடிவி மற்றும் போலீசாரின் உடலில் பொருத்தப்பட்ட கேமரா (Body Camera) பதிவுகளை பாதுகாக்க வேண்டும், மேலும் சம்பவம் குறித்து தனி விசாரணை நடத்த வேண்டும் என்று மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்
இதற்கிடையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மாணவர்களை சுட உத்தரவிட்டது யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, “நியாயமான, பொறுப்புள்ள கல்வி முறையை மாணவர்கள் கோரினர். ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு பதிலாக பாதுகாப்புப் படையினர் அளவுக்கு மீறிய பலத்தைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகள் மட்டுமல்லாமல், உயிருக்கு ஆபத்தான பெல்லட் கன் (துகள்குண்டு துப்பாக்கி) போன்ற ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கானோர் கடுமையாக காயமடைந்துள்ளனர். பெண் மாணவிகளும் தாக்கப்பட்டுள்ளனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “19 வயதான சாகில் லோச்சாப் என்ற மாணவரை நான் சந்தித்தேன். அவர் மீது பெல்லட் கன் மூலம் சுடப்பட்டதால், ஒரு கண்ணின் பார்வையை இழக்கும் அபாயத்தில் உள்ளார். இதுபோன்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.