சென்னை

மிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எச் ஐ வி பரிசோதனை உபகரணங்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய்-சேய் நல மையங்கள் போன்ற அரசு மருத்துவமனைகளில் பிரசவம், விபத்து சிகிச்சை, அவசர சிகிச்சை, காசநோய் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஆகியோருக்கு சிகிச்சை தொடங்கும்போது எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் நலன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் நலன் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு இந்த சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எச்ஐவி பரிசோதனை உபகரணங்கள் அடங்கிய ‘கிட்’-கள் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மூலம் மாவட்ட தலைமையகங்களுக்கு மாதம்தோறும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். தமிழக அரசு மருத்துவமனைகளின் தேவைக்கான மருந்துப் பொருட்களை இருப்பு வைக்க மாவட்டம்தோறும் அமைந்துள்ள கிடங்குகளுக்குச் சென்று சேரும் இந்த உபகரணங்கள் பின்னர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும். இந்த விநியோகத்தில் கடந்த 2 மாதங்களாக ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பொது மருத்துவ சேவையில் பின்னடைவான சூழல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்களில் பணியாற்றுவோர் கருதுகின்றனர்.

சுகாதாரத்து துறையில் பணியாற்றும் சிலர் இது குறித்து,

“ எச்ஐவி பரிசோதனைக்கான உபகரணங்கள் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மூலம் ஒப்பந்த முறையில் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டு தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த ஒப்பந்த நடைமுறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் மாவட்டங்களுக்கு போதுமான அளவில் பரிசோதனை உபகரணங்கள் சென்று சேர்வதில்லை. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்த தட்டுப்பாடு நீடிக்கிறது. இதற்குத் தீர்வு ஏற்பட இன்னும் 1 மாதம் தேவைப்படலாம் எனத் தெரிகிறது.”

எனத் தெரிவித்துள்ளனர்.