ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோயில் வரலாறு

Must read

ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோயில் வரலாறு

இந்தக் கோவில் கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. கோவிலில் மூலவராக இருக்கும் அன்னபூர்ணேஸ்வரி சிலை அகத்தியரால் எட்டாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையானது சிதிலமடைந்து காணப்பட்டதால், அந்த சிலை புதுப்பிக்கப்பட்ட பின்பு, அம்மனுக்கு ‘ஆதி சக்த்ய மகா ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி’ என்று புதிய பெயரைச் சூட்டி அழைத்து வந்தனர். இந்த சிலை முழுவதும் தங்கத்தால் ஆனது.

 

அன்னபூர்ணேஸ்வரி தாய் நின்ற கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கின்றார். அமைதி கொண்ட அழகினை உடைய அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் உச்சிகால பூஜை நடந்து முடிந்த பிறகு அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்படுகிறது. அன்னபூரணி என்றாலே அன்னத்தைப் பூரண திருப்தியோடு பக்தர்களுக்கு அளிப்பவள் என்று பொருள். அன்னபூரணியைத் தரிசித்துவிட்டு ஒருவர் கூட பசியுடன் கோவிலை விட்டுத் திரும்பிச் செல்ல முடியாது.

கோவிலில் அம்மனை தரிசிக்கும் சிறு குழந்தைகளுக்குக் கூட பசும்பால் தரப்படுகிறது. கோவிலின் சுற்றுச்சூழல் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக அமைந்துள்ளது. பக்தர்களுக்குத் தேவையான விரிப்புகள், தலையணை கம்பளம் எல்லாம் கோவிலிலேயே தரப்படுகிறது. இப்படியாக அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் மனதாரவும், வயிறாரவும் திருப்தி தரும் வகையில் அம்மனின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.

அன்னபூரணி அவதரித்த வரலாறு

புராணக் கதைகளின் படி சிவன் மற்றும் பார்வதி தேவி இருவருக்கும் ஒரு முறை வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சண்டையின் போது சிவபெருமான் உணவுப்பண்டங்களை மாயை என்று கூறினார். பார்வதியோ உணவு மாயை அல்ல என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிவபெருமான் உணவு மாயை என்பதை நிரூபிக்கத் தட்பவெப்ப நிலை மாறாமல் நிறுத்திவிட்டார். இதனால் தாவரங்கள் வளரவில்லை. உணவுப் பொருட்கள் ஏதும் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

இதனால் நம் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. இதனை நீக்கப் பார்வதி தேவியானவள், அன்னபூரணியாக அவதாரம் எடுத்து அனைவருக்கும் உணவினை வழங்கி பஞ்சத்தைப் போக்கி அருள் பாவித்தாள். இதன் பிறகு அன்னபூரணி நமக்கெல்லாம் உணவு அளிக்க நம் பூமியிலேயே தங்கிவிட்டால் என்பது வரலாற்றுக் கதை.

பலன்கள்

இந்த அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் அர்ச்சனை செய்தால் இங்குத் தரப்படுகின்ற முக்கிய பிரசாதம் அரிசி தான். அந்த அரிசியைக் கொண்டு வந்து நம் வீட்டின் அரிசி ஜாடியில் போட்டு வைத்தால், என்றும் உணவுக்கு நம் வீட்டில் பஞ்சமே இருக்காது. நம் வீட்டில் உள்ள பாத்திரம் அட்சய பாத்திரமாகத் தான் என்றும் திகழும் என்பது நம்பிக்கை.

செல்லும் வழி

கர்நாடகா மாநிலம் சிக்மங்கலூரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில், அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்லும் வழியாக அமைந்திருக்கிறது.

More articles

Latest article