குடிமல்லம் சிவன் கோவில் வரலாறு.

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் குடிமல்லம் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையின் அருகில் அருள்மிகு பரசுராமேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது.

இந்த கோவிலில் உள்ள லிங்கம் தான் இந்தியாவில் உள்ள லிங்கங்களிலேயே மிகவும் பழமையானது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த லிங்கம் இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கூறுகின்றார்கள். இந்தக் கோவிலில் அம்பாள் ஆனந்தவல்லியாக காட்சி அளிக்கின்றார்.

மிகவும் பழமைவாய்ந்த கோவிலாகக் கருதப்படும் இந்த கோவிலின் மூலவர் சிவபெருமான், மும்மூர்த்திகளையும் சேர்த்து லிங்கத்தின் வடிவில் காட்சியளிக்கின்றார். லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் சந்திரசேன யட்சன் இருக்கின்றான். இவனுக்குப் பிரம்ம யட்சன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

யட்சனுக்கு மேல் பகுதியில் நின்று கொண்டிருக்கும் சிவபெருமான் ஒரு கையில் பரசுவையும், மற்றொரு கையில் வேட்டையாடிய ஆட்டுக்கிடாவையும் கையில் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கின்றார். கையில் பரசு இருப்பதால் இவருக்குப் பரசுராமர் என்ற பெயர் வந்தது.

இந்த கோவிலில் பிரம்மனாவர் யட்சன் ரூபத்திலும், விஷ்ணுவானவர் பரசுராமர் ரூபத்திலும், சிவபெருமான் லிங்க ரூபத்தில் மும்மூர்த்திகளாகத் திகழ்கின்றனர்.

தல வரலாறு

தன் தந்தையின் சொல்லை மறுக்காதவர் பரசுராமர். ஒருமுறை தன் தந்தை பரசுராமருக்கு அளித்த கட்டளைப்படி, பரசுராமர் தன் தாயைக் கொன்று விட்டார். இந்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடுவதற்காக இத்திருத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டார். அந்த கோவிலில் உள்ள தோட்டத்தில் அதிசய செடி ஒன்றில், தினமும் ஒரு பூ மட்டும் மலர்ந்தது. இதைப் பார்த்த பரசுராமர், அந்த பூவினை தினம்தோறும் சிவனுக்குச் சூட்டி பூஜை செய்து வந்தார்.

 

 

அந்த ஒற்றை மலரை, காவல் காக்க சந்திரசேனன் என்ற காலனையும் நியமித்தார். சந்திரசேனனும் சிவபெருமானின் தீவிர பக்தன் தான். ஒரு நாள் பரசுராமர் வெளியில் சென்றிருந்த சமயத்தில் அந்தப் பூ மலர்ந்திருந்தது. பூஜை நேரத்திற்குப் பரசுராமர் கோவிலுக்குத் திரும்பவில்லை. இதனால் சந்திரசேனன் அந்த மலரைப் பறித்து சிவபெருமானுக்குச் சூட்டி, பூஜை செய்து விட்டான். திரும்பி வந்த பரசுராமர், சந்திரசேகரின் இந்த செயலை கண்டு கோபமடைந்தார்.

பரசுராமர் சித்திரசேனனை தாக்க, இருவருக்கும் சண்டை ஏற்பட்டு. அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையானது ஒரு முடிவுக்கு வராமல், வெற்றி தோல்வி என்று மாறி மாறி நீண்ட நாட்களுக்குச் சண்டை தொடர்ந்தது. இதனைக் கண்ட சிவபெருமான் நேரில் தோன்றி இருவரையும் அமைதிப்படுத்தி தன்னிடத்தில் வசப்படுத்திக் கொண்டார். அன்று முதல் இந்த கோவில் சந்திரேசன், பரசுராமன், சிவலிங்கம் என்று மூவரையும் மூலவராகக் கொண்டுள்ளது.

இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் பரசுராமேஸ்வரர் ஆறு அடி பள்ளத்தில் காட்சியளிக்கின்றார். இதனால் இந்த கிராமத்திற்கு ‘குடிபள்ளம்’ என்று பெயர் வந்தது. ‘குடி’ என்றால் தெலுங்கில் வசிக்கும் ஊரைக் குறிக்கிறது. குடிபள்ளம் என்னும் பெயர் நாளடைவில் மருவி குடிமல்லம் என்று மாறிவிட்டது.

பலன்கள்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி இங்குள்ள நெல்லி மரத்தில், பெண்கள் சிறிய தொட்டிலைக் கட்டி செல்கிறார்கள். இதன்மூலம் பெண்களுக்குக் கண்டிப்பாகக் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.