மும்பை

ந்தி நடிகர் சல்மான் கானை அடித்து உதைத்தால் ரூ. 2 லட்சம் பரிசு அளிக்கப் போவதாக இந்து அமைப்பின் தலைவர் கூறி உள்ளார்.

மான் வேட்டை புகாரில் சிறை தண்டனை பெற்ற இந்தி நடிகர் சல்மான் கான் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.   அவர் தயாரித்து தற்போது ஒரு இந்தித் திரைப்படம் வெளிவர உள்ளது.   இந்த படத்திற்கு லவ் ராத்திரி என பெயரிடப்பட்டுள்ளது.    இது இந்து மதப் பண்டிகையான நவராத்திரி பண்டிகையை இழிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு இந்து ஹி ஆகே என்னும் இந்துத்வா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   இந்த அமைப்பின் தலைவர் கோவிந்த் பராஷர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   அவர், “நடிகர் சல்மான்கான் தயாரித்துள்ள இந்திப் படத்துக்கு லவ் ராத்திரி எனப் பெயர் வைக்கப் பட்டுள்ளது.  இந்துக்களின் நவராத்திரி பண்டிகையை அவமானப் படுத்தும் வகையில் இந்த பெயர் அமைந்துள்ளது கண்டிக்கத் தக்கது.

இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.   இப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் கொளுத்தப்படும்.     இவ்வாறு இந்துக்களின் மனதை புண்படுத்தும் பெயரை வைத்த சல்மான் கானை அடித்து உதைப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும்” என கூறி உள்ளார்.