புதுடெல்லி: ஐஐடி – டெல்லியில் தத்துவம் மற்றும் இலக்கியத் துறை பேராசிரியராகப் பணியாற்றும் திவ்யா திவிவேதி, இந்து மதம் என்ற கருத்தாக்கம் 20ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட ஒன்று என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

“இந்து மதம் என்பது கடந்த 20ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கருத்தாக்கம். இந்துப் பெரும்பான்மை என்ற ஒரு போலியான கற்பிதத்தை உருவாக்குவதில் மகாத்மா காந்தி பெரும்பங்காற்றினார்” என்றுள்ளார். அவரின் இந்தக் கருத்திற்கு சமூக வலைதளங்களில் இந்து வலதுசாரிகள் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

பேராசிரியர் திவ்யா, காந்தியைப் பற்றிய ஒரு புத்தகத்தையும் இன்னொருவருடன் சேர்ந்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூத்திர மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களே இந்தியாவில் பெரும்பான்மை என்பதை மறைக்கவே, இந்துப் பெரும்பான்மை என்ற கற்பிதம் உருவாக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

இத்தகைய போலி கற்பிதத்தால் இந்தியாவில் சிறுபான்மையினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்துப் பெரும்பான்மை என்பதையும், இந்தியா என்ற அடையாளத்தையும் உருவாக்குவதில் காந்தி பெரிய பங்கையாற்றினார் என்பது இவரின் ஆய்வுக் கருத்து.

தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மேல்சாதி தலைவர்கள் உருவாக்கிய இந்த போலி கற்பிதங்களை இன்று நாம் உதற வேண்டியுள்ளது என்றுள்ளார் அவர். இக்கருத்தை நிரூபிக்கும் விதமாக பல ஆய்வுகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.