திருச்சி:

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்  திருநாவுக்கரசுக்கு ஆதரவாக திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்ட கூட்டத்தில்  இந்து முன்னணி யினர் செருப்பு வீசியதால் மோதல் வெடித்து பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் நிலையில் காவல்துறையினர் தலையிட்டு மோதலை தடுத்தனர்.

சமீபத்தில் பொள்ளாச்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய திக தலைவர் வீரமணி, கிருஷ்ணனை விளித்து பேசியது இந்துக்களிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி திக மீது இந்துக்களின் கோபத்தை அதிகரித்து வருகிறது.  இதையடுத்து, பாஜக, இந்து முன்னணி சார்பில், திமுக கூட்டணிக்கு இந்துக்கள் ஓட்டு போடக் கூடாது என்ற பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணி, காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, திருச்சி கீரக்கொள்ளை பகுதியில் தேர்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திக தலைவர் வீரமணி பேசிவிட்டு கீழே இறங்கிய நேரத்தில் மேடை மீது செருப்பு வந்து விழுந்தது. இதன் காரண மாக பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திடீரென அங்கே வந்த இந்து முன்னணியினர்,  மேடையை நோக்கி செருப்பை மற்றும் கற்களை  வீசினர். , கீழே இருந்த நாற்காலிகளை எடுத்து மேடை மீது வீசினர். இந்த நிலையில், வீரமணியை காவல்துறையினர்  பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இந்து முன்னணியினர் தாக்குதலில்  2 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்துமுன்னணிக்கு எதிராக திகவினரும் திரண்டனர். இதனால்  மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு, மோதலை தடுத்தனர்.

திகவினர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து,  இந்துமுன்னணியை 12 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் கூறி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் இந்துக்களுக்கு எதிரானவன் கிடையாது என்றும், தனது மனைவி கோவிலுக்கு செல்வதை தடுப்பது இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.