சென்னை: தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசு அலுவலர்கள் மீது இந்தி திணிக்கப்படுவதாக ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் புகார்  கூறியுள்ளார்.

மத்தியஅரசு மும்மொழிக் கொள்கையை தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே நீடிக்கும் என்று கூறப்பட்டுஉள்ளது. இந்த நிலையில்,  தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்பட்டு வருவதாகபுகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே, மத்திய அரசு மறைமுகமாக தபால் நிலையம்,வங்கி உள்பட மத்தியஅரசு அலுவலகங்களில் இந்தி திணிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு பணியாற்றும் தமிழக அதிகாரிகளையும் இந்தி படிக்க வலியுறுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு அலுவலகமான சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்தில் பகிரங்கமாக இந்தி திணிப்பு செய்யப்படுவது அம்பலமாகி உள்ளது.

ஜிஎஸ்டி அலுவலகத்தில்  உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த பாலமுருகன். இவரை விரும்பமின்றி, இந்தி பிரிவில் பணியமர்த்தி, இந்தி கற்றுக்கொள்ளும்படி உயர் அதிகாரிகள்  குடைச்சல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் முருகன் குற்றம் சாட்டி,   மத்திய மறைமுக வரிகள் வாரியத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

விருப்பம் இல்லாத ஒருவரை இந்தியை பரப்ப வேண்டும் என்று நிர்பந்திப்பதும்கூட இந்தி திணிப்பே  என்று கூறியவர்,  தமிழ் உணர்வை சிறுமைபடுத்தும் நோக்குடன் இந்தி பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.