சென்னை:
தமிழக அரசு வழங்கும் ஸ்மார்ட் ரேசன் கார்டில், சேலத்தைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்மணியின் படத்துக்குப் பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் அச்சிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சென்னையில் ஒருவரது பெயர் இந்தியில் அச்சடிக்கப்பட்டுள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், காகிதத்தால் ஆன குடும்ப அட்டைகள் கடந்த 2005ம் வருடம் அளிக்கப்பட்டன. இவை 2010-ம் வருடம் புதுப்பித்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போலி அட்டைகளை ஒழிப்பதற்கான கணக்கெடுப்பு நடத்த வேண்டியிருப்பதாக தெரிவித்த தமிழக அரசு, புதிய குடும்ப அட்டைகள் வழங்கவில்லை.
பிறகு 2014-ம் ஆண்டு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தபோதிலும் அவை அறிவிப்புகளாகவே இருந்தன. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதத்துக்குள் ஸ்மார்ட் அட்டைகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காலக்கெடு முடிந்த பிறகும் பாதிக்கும் சற்று கூடுதலானவர்களுக்கு மட்டுமே ஸ்மார்ட் கார்டுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதிலும் ஸ்மார்ட் கார்டில் பெயர்கள் மற்றும் படங்கள் மாறியிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் ஊராட்சி ஆர்.சி.செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவ சரோஜா (42) என்பவருக்கு அளிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில், அவரது படத்திற்கு பதில் பிரபல சினிமா நடிகை காஜல் அகர்வால் படம் இடம் பெற்று உள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஸ்மார்ட் கார்டில், உள்ள பெயர் இந்தியில் அச்சடிக்கப்பட்டுள்ள சம்பவமும் நடந்துள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியில் வசிப்பவர் வெற்றிவேல். ஸ்மார்ட் கார்டில் இவரது மகன் வி ஹர்ஜித் (வயது 13) பெயர், இந்தியில் அச்சிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வெற்றிவேல் நம்மிடம், “ஸ்மார்ட் அட்டையில் எனது மகனது பெயர் மட்டும் இந்தியில் உள்ளது. இதனால் ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்பதுதெரியவில்லை. கார்டு சமீபத்தில்தான் வந்தது. இனிதான் பெயரை தமிழில் மாற்றக்கோரி புகார் அளிக்க வேண்டும்” என்றார்.
சமீபகாலமாக மத்திய அரசு இந்தியைத் திணிப்பதாக பல கட்சிகள் புகார் தெரிவித்து வரும் நிலையில், மாநில அரசு வழங்கும் ஸ்மார்ட் ரேசன் கார்டிலும் இந்தியில் பெயர் அச்சிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.