மும்பை
புர்காவை தடை செய்தால் இந்துப் பெண்கள் தலையில் போட்டுக் கொள்ளும் கூங்கட் எனப்படும் முக்காடையும் தடை செய்ய வேண்டும் என இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கூறி உள்ளார்.
கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் தேவாலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அதில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500 க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர். அந்த தாக்குதலுக்கு ஐ எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. இந்த தீவிரவாதிகள் இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவை அணிந்து வந்துள்ளனர்.
அதனால் அவர்களை அடையாளம் காண முடியாமல் போனதை ஒட்டி இலங்கை அரசு புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் அனைத்து உடைகளுக்கும் தடை விதித்துள்ளது. இதை ஒட்டி சிவசேனா அமைப்பு இலங்கை விதித்ததைப் போல் இந்தியாவிலும் புர்காவுக்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தது.
இதற்கு மூத்த பாடலாஸிரியரான ஜாவேத் அக்தர், “இந்தியாவில் புர்காவை தடை செய்ய சட்டம் இயற்றுவதில் எனக்கு எவ்வித ஆட்சேபமும் கிடையாது. அதே நேரத்தில் இந்துப் பெண்கள் சேலையால் தங்கள் தலை மற்றும் முகத்தை மறைக்கும் படி முக்காடு போடுகின்றனர். இதை கூங்கட் என அழைக்கின்றனர்.
இது ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகம் உள்ளது. எனவே ராஜஸ்தான் தேர்தலுக்கு முன்பாக இந்த முறைக்கும் இந்திய அரசு தடை விதிக்க வேண்டும். என்னை பொறுத்த வரை கூங்கட் மற்றும் புர்கா இரண்டுக்குமே தடை விதிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் வீட்டில் உள்ள பெண்கள் யாரும் புர்கா அணிவதில்லை. ஈராக் நாட்டிலும் முகத்தை மூடிக்கொள்வதில்லை” என தெரிவித்துள்ளார்.