சென்னை,

நாடு முழுவதும் இந்தி மொழியை திணிக்கும் மறைமுக வேலையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மத்தியில் பாரதியஜனதா ஆட்சி பதவியேற்ற பிறகு இந்தி திணிப்பு அதிக அளவில்  நடைபெற்று வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் ஆங்கில எழுத்து அழிக்கப்பட்டு, இந்தி எழுதப்பட்டது. அதுபோல மத்திய அரசு அலுவலங்களில் பணிபுரிபவர்கள் இந்தி கற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்தி மொழியை பரப்பவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தி மொழி தெரியும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளும், அனைத்து மாநிலங்களிலும், ஆங்கிலத்துடன், கட்டாயமாக இந்தியிலும் இடம் பெற வேண்டும் என்று மனித வள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதுபோல இந்தி இல்லாத மாநிலங்களில் நவோதயா பள்ளிகளையும் திறக்கவும் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்திலும் இந்தி அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதற்கான அனுமதி நடைபெற இருக்கும் சிண்டிகேட் கூட்டத்தில் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பல்கலைகளில் பட்டம் பெறும் பட்டதாரிகள் மற்ற மாநிலங்களிலும் வேலை வாய்ப்பை பெறுவதற்காக, அவர்களுக்கு இந்தி கற்றுத்தர தமிழக  உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முதுநிலை மாணவர்கள் விருப்ப மொழியாக இந்தியை தேர்வு செய்யும் வகையில்,. புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இதன் முதல்கட்டமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இந்தி பாடத்திட்டம் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

சென்னை பல்கலையின் மேலாண்மை படிப்பு துறையின் வேலைவாய்ப்பு தகவல் கையேடு வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி பேசும்போது,  ”ஆங்கில மொழியுடன், இன்னொரு சர்வதேச மொழி; தமிழ் அல்லது தற்போது மாணவர்கள் படிக்கும் மாநில மொழியுடன், மற்றொரு தேசிய மொழியும் அடுத்த கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் என்று கூறினார்.

அவரது அறிவிப்பு இந்தி மொழிக்கான அறிவிப்பு என்றே அதிகாரிகள் கூறி உள்ளனர்.

நடைபெற இருக்கும் சென்னை பல்கலையின் சிண்டிகேட் மற்றும் அகாடமிக் கவுன்சிலில் இந்த புதிய பாடத்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.