டில்லி,

லகம் முழுவதும் இந்தி மொழியை பிரபலபடுத்த சபதம் எடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

மேலும் நாடு பெருமையடை இந்தி அவசியம் என்றும், இந்தி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளார். இது இந்தி பேசாத மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

வருடந்தோறும் செப்டம்பர் 14ந்தேதி  இந்தியா இந்தி திவாஸ் விழா வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய ராஜ்நாத் சிங் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது, இந்தியா இந்தி திவாஸ் தினத்தன்று மக்கள் தங்களது  மனதிலும், வார்த்தை யிலும், செயலிலும் இந்தியை பிரபலப்படுத்த முடிவெடுக்க வேண்டும் என்றும், இந்தியை மதிப்பிற்குரிய நிலைக்கு எடுத்துச் செல்வோம் அதன் வாயிலாக  நம்முடைய நாட்டை பெருமை யடைய செய்வோம் என்றும் கூறி உள்ளார்.

மேலும்,  “இந்தி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழி, நம்முடைய மொழி அதை அரசு பணிகளுக்கு முதன்மை மொழியாக பயன்படுத்த முயற்சிப்போம் என்றும், அதை  உறுதி செய்வது நம்முடைய அரசியலமைப்பு பொறுப்பாகும் என்றும் கூறினார்.

மேலும், இந்தியை அரசு பணிகள் மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகரிக்க வேண்டும், இதுவே ஒரு வலிமையான நாட்டிற்கு அடையாளம் என்று கூறி உள்ளார்.

இந்தி மொழியை பரந்து விரிய செய்வதன்மூலம் நமது நாட்டின் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்றும்,  இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ள இந்தி, மக்களிடையே வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்தி வருவதாகவும், இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தும் மொழியாகவும் உள்ளது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும்,  மத்திய அரசின் அமைச்சகங்கள், அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகள் போன்றவ இந்தியை பிரதானமாக பயன்படுத்த வேண்டும் என்றும், அதுபோல அரசு நிறுவனங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் இந்தியை ஊக்குவிக்க வேண்டும், அதுபோல கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், நம் மக்களின் முயற்சியின் காரணமாக, இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அமைச்சரின் இந்திக்கு ஆதரவான இந்த பேச்சு இந்தி பேசாத மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.