திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலைய தகவல் மையத்தின் பெயரை, இந்தியில்  ‘சகயோக்’ என பொருத்தப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதை ரயில்வே அதிகாரிகள் உடனடியாக அகற்றினர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் Information center என்றும், தமிழில் சேவை மையம் என்பதற்கு பதிலாக இந்தியில் கூறப்படும் சகயோக் என்பதை, தமிழிலும் சகயோக் என்று எழுதப்பட்டிருந்தது. இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், இதுவும் இந்தி திணிப்புதான் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்தியில் சகயோக் என எழுதப்பட்டால், அதேபோல் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர் என்றும், தமிழில் சேவை மையம் என்றும் எழுதப்பட்டால் தான் அனைத்து மொழியினருக்கும் புரியும் என்றும், மேலும், அரசியல் கட்சிகளும் இதுதொடர்பாக தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக திருப்பூர் ரயில் நிலைய சேவை மையம் முன்பு ஒட்டப்பட்டிருந்த சகயோக் இந்தி பெயர் பதாகையை அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.