வாஷிங்டன்:
பாகிஸ்தானில் புரட்சி நடத்தி அணு குண்டுகளை கைப்பற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப் (குடியரசு கட்சி), ஹிலாரி கிளிண்டன் (ஜனநாயக கட்சி) ஆகியோரின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

அவர்களின் பிரசாரத்தின்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
டொனால்டு டிரம்ப் பேசும் போது, “பாகிஸ்தானில் நீண்ட நாட்களாக ஸ்திரதன்மை இல்லை. அதனால் அங்கு அணு ஆயுத கிடங்கு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும்” என உறுதி அளித்தார்.
விர்ஜீனியாவில் கட்சி நிதியளிப்பு கூட்டத்தில் பேசிய ஹிலாரி கிளிண்டன், இந்தியா மீதான பகைமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாகிஸ்தான் அணு ஆயுதத்தை அதிக அளவில் தயாரித்துள்ளது. மேலும், அமெரிக்கா வழங்கிய அதி நவீன அணு ஆயுத ஏவுகணைகளும் அங்கு உள்ளன.
எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் அது ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் திடீர் புரட்சி மூலம் அரசை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். பின்னர் அணு குண்டுகளை கைப்பற்றி அதன் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன் காரணமாக பாகிஸ்தானும் அதிர்ச்சி அடைந்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Patrikai.com official YouTube Channel