டெல்லி: ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது என உச்சநீதி மன்றும் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த பிரச்சினைக்கு உணர்ச்சியூட்டாதீர்கள் என்றும் கண்டித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய இஸ்லாமிய பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்ததீர்ப்பை ஏற்க இஸ்லாமியர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, கர்நாடக உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை.

இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ள முடியாமல் ஒரு வருடத்தை இழக்க நேரிடும் என்பதால் இந்த பிரச்சினை அவசரமானது, அதனால் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.  இதற்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “தேர்வு களுக்கும் இந்த பிரச்னைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியதுடன், ஹிஜாப் விவகாரத்தை உணர்ச்சிப்பூர்வ விஷயமாக மாற்றாதீர்கள் என்று கூறினார்.

ஏற்கனவே ஹிஜாப் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக்காதீர்கள் என்று உச்சநீதி மன்றம் கண்டித்ததுடன், மேல்முறையீட்டு வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறியிருந்தது. இந்த நிலையில், மீண்டும் அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டதை ஏற்க உச்சநீதி மன்றம் மறுத்து விட்டது.

ஹிஜாப் மேல்முறையீடு வழக்கு! ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தகவல்…