பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி தேர்வை 21ஆயிரம் மாணாக்கர்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிகமானோர் முஸ்லிம் மாணவிகள் என்பது தெரிய வந்துள்ளது. ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத மறுக்கப்பட்டதால் பலர் தேர்வை புறக்கணித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சலசலப்பை  ஏற்படுத்திய நிலையில், நீதிமன்றமும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் மார்ச் 28-ம்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்வு நேற்று தொடங்கியபோது முஸ்லீம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். ஆனால், அவர்களை நீதிமன்ற தீர்ப்பை காட்டி, ஹிஜாப்பை எடுத்துவிட்டு தேர்வு எழுத வரும்படி கோரப்பட்டனர். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்ததால், தேர்வு கண்காணிப்பாளர்கள் அவர்களை திருப்பி அனுப்பினர். இருந்தாலும்,  பெரும்பாலான முஸ்லிம் மாணவிகள் தேர்வு எழுத ஹிஜாப் அணியாமல் வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள், வாழ்க்கைக்கு தேவை கல்வி என்றும், ஹிஜாப் அணிவதை விட தேர்வு தங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்ததாகவும்  தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தேர்வை மாநிலம் முழுவதும்  8.69 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர், ஆனால் 20,994 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு தேர்வு வராதவர்கள் எண்ணிக்கை  3,769 பேர் மட்டுமே. ஆனால் இந்த ஆண்டு 21ஆயிரத்தை எட்டியுள்ளது.  கடந்த ஆண்டு 99.54 சதவீதமாக இருந்த வருகை, இந்த ஆண்டு 97.59 சதவீதமாக குறைந்துள்ளது. தேர்வெழுதிய 8.48 லட்சம் மாணவர்களில், 8.11 லட்சம் பேர் புதியவர்கள், 35,509 பேர் தனியார் புதியவர்கள், 1,701 பேர் மீண்டும் எழுதுபவர்கள் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பிசி நாகேஷ்,  “இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முழு அளவிலான எஸ்எஸ்எல்சி தேர்வுகள் நடந்தன. குழந்தைகள் உற்சாகமாக தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வு எழுதினர். பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் தங்கள் குழந்தைகளை தேர்வு எழுத அனுப்பி வைத்தனர், அதே நேரத்தில் ஆசிரியர்களும் தேர்வை நடத்துவதில் மகிழ்ச்சி அடைந்தனர்,” என்று  தெரிவித்துள்ளார்.